Published : 02 Dec 2024 07:20 PM
Last Updated : 02 Dec 2024 07:20 PM
புதுடெல்லி: மகாராஷ்டிர பாஜகவின் சட்டமன்ற கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்துக்கு மத்திய பார்வையாளர்களாக நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மகாராஷ்டிராவில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டத்திற்கு மத்திய பார்வையாளர்களாக குஜராத் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் மற்றும் சண்டிகரின் கட்சிப் பொறுப்பாளருமான விஜய் ரூபானி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை கட்சியின் உயர்மட்டக் குழு நியமித்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மகாயுதி கூட்டணி, மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதில், பாஜக 132 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தேர்தல் முடிவுகளை அடுத்து சிவசேனா தலைவரும் முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான தேவேந்திர ஃபட்னவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் டெல்லியில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரைச் சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசித்தனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, மகாயுதி கூட்டணியின் முதல்வராக பாஜக மேலிடம் யாரை தேர்வு செய்தாலும் அதை தானும் சிவ சேனாவும் ஆதரிக்கும் என தெரிவித்தார். இதையடுத்து, இம்முறை பாஜகவைச் சேர்ந்தவர் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் வெளியானது. முதல்வர் பதவியை இழக்க நேர்வதால் ஏக்நாத் ஷிண்டே வருத்தம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இவ்விஷயத்தில் பாஜக தலைமை இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே, சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக அஜித் பவாரும் அந்தந்த கட்சிகளின் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதற்கான கூட்டம் நாளை நடைபெறலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய பார்வையாளர்கள் குறித்த அறிவிப்பை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில், பதவியேற்பு விழா வரும் 5-ம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறும் என்று மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT