Published : 02 Dec 2024 06:19 PM
Last Updated : 02 Dec 2024 06:19 PM
நாக்பூர்: அரசியல் என்பது திருப்தியற்ற ஆன்மாக்களின் கடல்; அங்கு ஒவ்வொரு நபரும் தற்போதைய பதவியை விட உயர்ந்த பதவிக்காக ஆசைப்படுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற '50 கோல்டன் ரூல்ஸ் ஆஃப் லைஃப்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "அரசியல் என்பது திருப்தி அற்ற ஆன்மாக்களின் கடல். இங்கே ஒவ்வொருவரும் சோகமாக இருக்கிறார்கள். கவுன்சிலராக இருக்கக் கூடியவருக்கு எம்எல்ஏ-வாக ஆக முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. எம்எல்ஏ ஆன ஒருவருக்கு அமைச்சர் ஆக முடியவில்லையே என வருத்தம் இருக்கிறது. அமைச்சரான ஒருவருக்கு நல்ல துறைகள் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அல்லது முதல்வராக முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. முதல்வராக இருப்பவரும், மேலிடம் எப்போது பதவி விலகச் சொல்லுமோ என்ற பதற்றத்தில் இருக்கிறார்.
வாழ்க்கை என்பது சமரசங்கள், நிர்ப்பந்தங்கள், வரம்புகள் மற்றும் முரண்பாடுகளின் விளையாட்டு. வாழ்க்கை சவால்களும் பிரச்சினைகளும் நிறைந்தது. வாழும் கலையை புரிந்துகொண்டு சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டும். எதிர்கொண்டவாறு முன்னேறிச் செல்வதே வாழும் கலை. அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் கூறிய ஒரு பொன்மொழி என் நினைவுக்கு வருகிறது. 'ஒரு மனிதன் தோற்பதால் அவன் முடிந்துபோக மாட்டான்; ஆனால் விலகிவிட முடிவெடுத்துவிட்டால் அவன் முடிந்துவிடுகிறான்' என்பதுதான் அந்த பொன்மொழி. மனிதர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நற்பண்புகளே அடிப்படை" என தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பிறகு அரசியல் களம் மாறி இருக்கும் நிலையில்; முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டிய நெருக்கடியில் உள்ள நிலையில் நிதின் கட்கரியின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT