Published : 02 Dec 2024 04:17 PM
Last Updated : 02 Dec 2024 04:17 PM
புதுடெல்லி: டெல்லி அருகே பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் போராட்டங்களை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013-ஐ மீண்டும் அமல்படுத்த வேண்டும், 2020-21ல் இருந்து நடந்து வரும் போராட்டங்களின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் டெல்லி நோக்கிச் சென்ற விவசாயிகள், பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 18 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையே ஷம்பு மற்றும் கானொரி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி கானொரி எல்லையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிய பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் நவம்பர் 26 அன்று அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு லூதியானாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனிடையே, விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலை காணவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது.
“அவர் விடுவிக்கப்பட்டதை நாங்கள் பார்த்தோம். மேலும் அவர் சனிக்கிழமையன்று தனது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு சக போராட்டக்காரரை வற்புறுத்தினார்.” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், “ஜனநாயக அமைப்பில், நீங்கள் அமைதியான போராட்டங்களில் ஈடுபடலாம். ஆனால் மக்களுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள். கானொரி எல்லை பஞ்சாபின் உயிர்நாடி என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். போராட்டம் சரியா தவறா என்பது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்.” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி இன்று பேரணியாக புறப்பட உள்ளனர். இதையடுத்து, டெல்லி எல்லையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முயலுமாறு விவசாயிகள் சங்கத் தலைவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகளுக்காக தனது இல்லத்தின் கதவு திறந்தே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT