Published : 02 Dec 2024 12:12 PM
Last Updated : 02 Dec 2024 12:12 PM
மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னவிஸ் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று அல்லது நாளைக்குள் முறைப்படி அவர் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில், “மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் டிசம்பர் 2 அல்லது 3 ஆம் தேதிகளில் நடைபெறும் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.” என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முறையைப் போன்றே 2 துணை முதல்வர்கள் நியமனம் இருக்கும் என்றும், ஒருவர் சிவ சேனா கட்சியையும், மற்றொருவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் சார்ந்தவராக இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர் தனது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவை துணை முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஏக்நாத் ஷிண்டே, "முதல்வர் பதவி தொடர்பாக பாஜக தலைமை எடுக்கும் முடிவை நானும் சிவ சேனாவும் ஏற்போம் என்றும், எங்கள் முழு ஆதரவும் இருக்கும் என்றும் நான் ஏற்கனவே கூறியுள்ளேன். (முதல்வர் பதவி தவிர்த்த) மற்ற விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஒரு சந்திப்பு நடந்தது, இப்போது நாங்கள் மூன்று கூட்டணி கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து அரசாங்கத்தை அமைப்பது குறித்து விவாதிப்போம்," என்று கூறினார்.
ஏக்நாத் ஷிண்டேவின் உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் தனது சொந்த கிராமத்துக்குச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில் அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஷிண்டே, “இப்போது என் உடல்நிலை நன்றாக உள்ளது. எங்கள் அரசின் பணிகள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
சிவ சேனாவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜித் பவாரும் அந்தந்த கட்சிகளின் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் தொடர்பான தகவல் இதுவரை வரவில்லை என்று பாஜக எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர். எனினும், இன்று அல்லது நாளை அதற்கான கூட்டம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பதவியேற்பு விழா வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. பதவியேற்பு விழா மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் மட்டும் டிசம்பர் 5-ம் தேதி பதவியேற்பார்களா அல்லது அமைச்சர்களும் பதவியேற்பார்களா என்பதை கூட்டணிக் கட்சிகள் கூட்டாக முடிவு செய்யும் என்று ஒரு மூத்த மகாயுதி தலைவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களை மகாயுதி கைப்பற்றியது. பாஜக 132 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT