Published : 02 Dec 2024 03:59 AM
Last Updated : 02 Dec 2024 03:59 AM
'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்திருப்பதாக மிரட்டி மும்பை பெண்ணிடம் ரூ.1.8 லட்சத்தை மர்ம நபர் பறித்துள்ளார். அதோடு வீடியோ காலில் அந்த பெண்ணின் ஆடைகளை களைய செய்து கொடூமைப்படுத்தி உள்ளார்.
'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் நாடு முழுவதும் புதிய மோசடி அரங்கேறி வருகிறது. பொதுமக்களை வீடியோ காலில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், தங்களை சிபிஐ, போலீஸ், வருமான வரி, சுங்கத் துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொள்கின்றனர். போதை பொருள் கடத்தல், நிதி மோசடி, வரிஏய்ப்பு உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டி அப்பாவி மக்களை 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்திருப்பதாக மிரட்டுகின்றனர். வழக்கில் இருந்து விடுவிக்க பெரும் தொகையை மிரட்டி பெறுகின்றனர். இதுபோன்ற மோசடி மும்பையில் அரங்கேறி உள்ளது.
மும்பை போரிவலி பகுதியை சேர்ந்த 26 வயது பெண், அந்தேரியில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அண்மையில் அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், டெல்லியை சேர்ந்த சிபிஐ அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், மும்பை பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து முழுமையாக விசாரிக்க மும்பையில் குறிப்பிட்ட ஓட்டலில் அறை எடுத்து தங்குமாறு மர்ம நபர் கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த பெண், குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்று பணம் செலுத்தி அறையில் தங்கினார். அப்போது வீடியோ காலில் வந்த மர்ம நபர், வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று கூறி அவரது கணக்கில் இருந்த ரூ.1.8 லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றக் கோரி உள்ளார். பயத்தில் உறைந்திருந்த பெண், ரூ.1.8 லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு மாற்றினார்.
பின்னர் அவரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறிய மர்ம நபர், ஆடைகளை முழுமையாக களைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மர்ம நபரின் மிரட்டல் தொனியில் நடுங்கிய பெண், வீடியோ கால் அழைப்பில் ஆடைகள் இன்றி நின்றிருக்கிறார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு மீண்டும் மும்பை பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் ஆடையில்லாமல் இருக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.
வேறு வழியின்றி நடந்த சம்பவங்களை அந்த பெண் தனது பெற்றோர், உறவினர்களிடம் கூறினார். அவர்களின் அறிவுரைப்படி மும்பை அந்தேரி போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் யாராவது மிரட்டினால் அச்சமடைய வேண்டாம். அந்த அழைப்பை துண்டித்து விடுங்கள். தேவைப்பட்டால் போலீஸ் நிலையத்தில் புகார் அளியுங்கள்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT