Published : 01 Dec 2024 02:05 AM
Last Updated : 01 Dec 2024 02:05 AM
புதுடெல்லி: இந்த ஆண்டில் திருமண செலவு சராசரியாக 7% அதிகரித்து ரூ.36.5 லட்சமாகி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.
திருமண வைபவம் ஆண்டுதோறும் புதிய புதிய பரிமாணங்களை எடுத்து வருகிறது. இதனால் இதற்கான செலவும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக ‘வெட்மிகுட்’ நிறுவனம் 3,500 தம்பதிகளிடம் கருத்துகளை கேட்டு ஒரு ஆய்வு நடத்தியது. இதில் 9% பேர் தங்கள் திருமணத்துக்கு ரூ.1 கோடிக்கு மேல் செலவிட்டதாக தெரிவித்தனர். மேலும் 9% பேர் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவிட்டதாக தெரிவித்தனர்.
தங்கள் திருமணத்துக்கு ரூ.15 லட்சத்துக்கும் கீழ் செலவிட்டதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 40% பேர் தெரிவித்தனர். இதுபோல ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவிட்டதாக 23% போரும் ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவிட்டதாக 19% பேரும் தெரிவித்தனர். இதன்படி, இந்த ஆண்டில் சராசரியாக ஒரு திருமணத்துக்கு ரூ.36.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் சராசரி செலவை விட 7% அதிகம். அதேநேரம், தம்பதிகளின் சொந்த ஊரில் அல்லாமல் வெளியூரில் திருமணம் செய்தவர்களின் சராசரி செலவு ரூ.51 லட்சமாக உயர்ந்துள்ளது.
சொந்த சேமிப்பு மற்றும் குடும் பத்தினரின் சேமிப்பிலிருந்து திருமண செலவை எதிர்கொண்டதாக 82% தம்பதிகள் தெரிவித்தனர். திருமணத்துக்காக கடன் பெற்றதாக 12% பேரும் தங்கள் சொத்தை பணமாக்கியதாக 6% பேரும் தெரிவித்தனர். இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த திருமண ஏற்பாட்டாளர் ஷஷாங்க் குப்தா கூறும்போது, “ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை சிறந்த முறையில் வித்தியாசமாக நடத்த விரும்புகின்றனர். திருமண செலவில் அதிகபட்சமாக திருமண இடத்துக்கு செலவிடுகின்றனர். அடுத்தபடியாக உணவு மற்றும் நல்ல திருமண ஏற்பாட்டாளர் நிறுவனத்துக்கு அதிகம் செலவிடுகின்றனர். இந்தியாவில் பெரும்பாலானவர்கள் சொந்த வீடு வாங்கவும், திருமணத்துக்கும் குழந்தைகளின் கல்விக்கும் அதிகம் செலவிடுகின்றனர்” என்றார்.
இந்தியாவில் இந்த ஆண்டில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் 48 லட்சம் திருமணம் நடைபெறும் என்றும் இதன் மூலம் ரூ.6 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என்றும் அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு கணித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT