Last Updated : 14 Jun, 2018 03:53 PM

 

Published : 14 Jun 2018 03:53 PM
Last Updated : 14 Jun 2018 03:53 PM

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9 தள்ளுபடி;வாகனத்துடன் வரிசையில் நிற்கும் மக்கள்: மஹாநிர்மான் சேனா ஏற்பாடு

மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு இன்று 50-வது பிறந்தநாள் என்பதால், மும்பையில் குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்களில் லிட்டருக்கு 9 ரூபாய் வரை தள்ளுபடி தந்து விற்பனை செய்யப்பட்டது.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாகனங்களின் பெட்ரோல் டேங்கை நிரப்பிச் சென்றனர்.

மஹராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு இன்று 50-வது பிறந்தநாளாகும். இதை வித்தியாசமாகக் கொண்டாட நினைத்த அவரின் ஆதரவாளர்கள், மக்களுக்கு உதவும் வகையில், பெட்ரோல் விலையைக் குறைத்து விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

இதன்படி, மும்பையில் குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.9 வரை குறைத்து விற்பனை செய்யச் செய்தனர். இதில் ஏற்படும் இழப்பை பெட்ரோல் நிலையங்களுக்கு தாங்களே தருவதாகவும் தெரிவித்தனர். இதனால், மும்பை நகர் பகுதியில் குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்களிலும், சிவாடி சட்டப்பேரவைத் தொகுதியிலும் பெட்ரோல் விலையைக் குறைத்து மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

மக்களுக்கு பெட்ரோல் முறையாகக் குறைத்து விற்பனை செய்யப்படுகிறதா என்பதையும் அந்த குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் நவநிர்மான் சேனா கட்சியின் தொண்டர்கள் கண்காணித்தனர். இந்தவிலைக் குறைப்பு குறித்த அறிந்ததும், ஏராளமான மக்கள் தங்கள் இரு சக்கரவாகனத்தைக் கொண்டுவந்து பெட்ரோல் நிரப்பிச் சென்றனர். இதனால், குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்களில் மக்கள் வாகனத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பெட்ரோல் நிரப்ப வந்தவர்கள் பெரும்பாலான மக்கள் தங்களின் வாகனத்தின் பெட்ரோல் டேங்கை நிரப்பி முகத்தில் புன்னகையுடன் சென்றனர்.

இது குறித்து இரு சக்கரவாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப வந்த சாகர் என்பவர் கூறுகையில், சமீபகாலமாக பெட்ரோல் விலை உயர்வால் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். நீண்ட இடைவெளிக்குப் பின் எனது பைக்கின் பெட்ரோல் டேங்கை நிரப்பி இருக்கிறேன். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

தாக்கரேவைப் போல், பிரதமர் மோடியும், பெட்ரோல் விலையைக் குறைத்து விற்பனை செய்ய வேண்டும். இளைஞர்களுக்கும், நடுத்தரமக்களுக்கும், குறைந்த சம்பளம் வாங்கும் பிரிவினருக்கும் மிகப்பெரிய நிம்மதி அளிக்கும் என்று தெரிவித்தார்.

மும்பையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.26 காசுகள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், ராஜ்தாக்கரேவின் பிறந்த நாளில் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலின் விலை லிட்டர் மிகக் குறைவாக ரூ.75 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. சந்தை விலையைக் காட்டிலும் 4 ரூபாய் குறைந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை ராஜ் தாக்கரே கடுமையாகக் கண்டித்துவந்தார். கடந்த மார்ச் மாதம் அவர் விடுத்த அறிக்கையில், 2019-ம் ஆண்டு மோடி இல்லாத இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என்று பிரச்சாரத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x