Published : 30 Nov 2024 04:03 AM
Last Updated : 30 Nov 2024 04:03 AM
ஆந்திர மாநிலம், காக்கிநாடா துறைமுகம் வழியாக ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுவதால், இது கடத்தல் காரர்களின் கூடாரமாகி விட்டதாகவும், அதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நேற்று அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காக்கிநாடா துறைமுகம் வாயிலாக சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 640 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பிடிப்பட்டன. இவற்றை நேற்று ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் துறைமுகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஆட்சிக்கு வந்ததும் காக்கிநாடா துறைமுகத்தில் நடைபெறும் சட்டவிரோத கடத்தல்கள் தடுத்து நிறுத்தப்படும் என வாக்குறுதி அளித்தேன். அதன்படி, இங்குள்ள தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ கொண்டபாபுவுக்கும் அறிவுறுத்தினேன். அவர் இங்கு நடக்கும் பல சட்டவிரோத செயல்களை உடனுக்குடன் எனக்கு தெரிவித்து வந்தார். கடந்த ஆட்சியில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனார்கள் என கூறினால், அதனை ஏளனம் செய்தனர். இதே விஷயத்தை மத்திய அரசு உறுதி படுத்தியதை தொடர்ந்து நம்பினர்.
எங்கள் ஆட்சியில் பகைமை, பழிவாங்கும் படலங்கள் இருக்காது. அதற்காக தவறு செய்தால் கைகட்டி பார்த்து கொண்டு இருக்க மாட்டோம். அமைச்சர் நாதேள்ள மனோகர் பல இடங்களில் நேரில் தணிக்கை செய்து இதுவரை 51 ஆயிரம் டன் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்படுவதை பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். காக்கிநாடா துறைமுகத்திற்கு தினமும் 1000 முதல் 1100 லாரிகள் வருகின்றன. வெளிநாடுகளுக்கு அதிகமாக அரிசி ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களில் காக்கிநாடாவும் ஒன்று. இதுபோன்ற ஒரு துறைமுகத்தில் வெறும் 16 பாதுகாவலர்களே பணியாற்றி வருகின்றனர். இது மிகவும் குறைவு. இதனை உள்ளூர் போலீஸாரோ அல்லது சிவில் சப்ளை அதிகாரிகளோ சரிவர கண்டு கொள்வதில்லை எனும் குற்றச்சாட்டும் நிலவுகிறது.
ரேஷன் மாஃபியாவின் பின்னால் யார் இருந்தாலும் விடமாட்டோம். இந்த அரிசி ஏழைகளுடையது. அவர்களுக்கு சொந்தமானது. ஒரு கிலோ ரூ. 43 வரை அரசு வாங்கி, ஏழைகளுக்கு விநியோகம் செய்கிறது. இதனை சிலர் பல்லாயிரம் கோடியில் வியாபாரம் செய்கின்றனர். வெளி நாடுகளில் இந்த அரிசி கிலோ ரூ.73க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் கப்பல்களை பறிமுதல் செய்யுங்கள். துறைமுக சி இ ஓ வுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். மத்திய உள்துறையில் நான் பேசிக்கொள்கிறேன். ஒரு துறைமுகத்திற்கு இவ்வளவு குறைவான பாதுகாப்பு இருப்பது நாட்டிற்கே நன்மை கிடையாது என துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT