Published : 30 Nov 2024 02:43 AM
Last Updated : 30 Nov 2024 02:43 AM
பிரதமருடன் பெண் கமாண்டோ இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் பிரதமர் மற்றும் அவருக்கான அரசு இல்லத்தில் தங்கி உள்ள குடும்பத்தினர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி, எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் உயரடுக்கு பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். கடந்த 1985-ம் ஆண்டில் இந்த சிறப்பு பாதுகாப்பு படை அமைக்கப்பட்டது. இந்த படையினர், பிரதமர் பயணமாகும் இடங்களுக்குச் சென்று பாதுகாப்பை வழங்குவர்.
இந்த சிறப்பு பாதுகாப்பு படையில் துணை ராணுவத்தினர், சிஏபிஎப் எனப்படும் மத்திய ஆயுதப்படை பிரிவினர், சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மாநில சிறப்பு போலீஸ் படையினர், மத்திய புலனாய்வு பிரிவில் இருந்து சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு பணி அமர்த்தப்படுவர்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு படையில் முதன் முறையாக பெண் கமாண்டோ ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் பிரதமரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் மோடியுடன், பெண் கமாண்டோ இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பாஜக எம்பியும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பெண் கமாண்டோ யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், எந்தப் படையில் இருந்து எஸ்பிஜி பணிக்கு வந்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து எஸ்பிஜி அதிகாரிகள் கூறும்போது, "எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பெண் கமாண்டோக்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
வழக்கமாக எஸ்பிஜி பெண் கமாண்டோக்கள் நாடாளுமன்றத்தின் நுழைவுவாயிலில் இருப்பர். அவர்கள் உள்ளே வரும் பெண்களை பரிசோதித்து உள்ளே அனுப்பும் பணியில் ஈடுபடுவர்.
தற்போது எஸ்பிஜி-யில் 100 பெண் கமாண்டோக்கள் உள்ளனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பிரதமர் பங்கேற்க வந்த போது ஒரு பெண் கமாண்டோ பாதுகாப்பு பணியில் இருந்தார். அந்த புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது" என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT