Published : 29 Nov 2024 06:07 PM
Last Updated : 29 Nov 2024 06:07 PM
புதுடெல்லி: சிறுபான்மையினரை பாதுகாக்க வங்கதேச இடைக்கால அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், அதானி விவகாரம் குறித்தும் வெளியுறவு அமைச்சம விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால், "வங்கதேசத்தில் அதிகரித்து வரும் தீவிரவாத பேச்சுக்கள் கவலை அளிப்பதாக உள்ளன. இந்துக்களுக்கும் பிற சிறுபான்மையினருக்கும் எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் குறித்து வங்கதேச அரசிடம் இந்தியா தொடர்ந்தும் வலுவாகவும் எழுப்பியுள்ளது. அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தை இந்தியா கேட்டுக்கொள்கிறது. அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களும், ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளும் கவலையை ஏற்படுத்துகின்றன. சிறுபான்மையினரை பாதுகாக்க வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக சேவையில் வலுவான சாதனை படைத்த உலக அளவில் புகழ்பெற்ற அமைப்பு இஸ்கான். சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டதை பொறுத்தவரை, அது தொடர்பாக நாங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளோம். தனிநபர்களுக்கு எதிரான வழக்குகள் மற்றும் சட்டப்பூர்வ செயல்முறைகள் நடந்து வருகின்றன. இந்த செயல்முறைகள் நியாயமான முறையில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு சரக்குகளின் சப்ளை தொடர்கிறது. வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகம் இரு திசைகளிலும் தொடர்கிறது. வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் நிலையைப் பொருத்தவரை நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். சிறுபான்மையினரையும், அவர்களின் நலன்களையும் அங்குள்ள அரசு பாதுகாக்க வேண்டும் என்பதே அது" என தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், “இது தொடர்பாக பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. அங்கு பாதுகாப்புக் கவலைகள் இருப்பதாகவும், அதனால் இந்திய அணி அங்கு செல்ல வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என கூறினார்.
அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், "இது தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அமெரிக்க நீதித்துறை சம்பந்தப்பட்ட ஒரு சட்ட விவகாரம். இது போன்ற வழக்குகளில் நிறுவப்பட்ட நடைமுறைகள் மற்றும் சட்ட வழிகள் உள்ளன. இந்த விவகாரம் குறித்து இந்திய அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. நாங்களும் அமெரிக்க அரசாங்கத்துடன் இந்த விவகாரம் குறித்து எந்த உரையாடலும் மேற்கொள்ளவில்லை.
சம்மன் அல்லது கைது தொடர்பாக ஒரு நாடு மற்றொரு நாட்டிடம் உதவி கோருவது என்பது பரஸ்பர சட்ட உதவி தொடர்பானது. அத்தகைய கோரிக்கைகள் தகுதியின் அடிப்படையில் ஆராயப்படுகின்றன. இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்கா தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை. இது தனியார் நிறுவனங்கள் தொடர்புடைய விஷயம். இந்த நேரத்தில் இந்திய அரசு எந்த வகையிலும் சட்டப்பூர்வமாக அதன் ஒரு பகுதியாக இல்லை" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT