Published : 29 Nov 2024 05:28 PM
Last Updated : 29 Nov 2024 05:28 PM
ஹைதராபாத்: வாடகை தாயாக இருப்பதற்கு ஒப்புக்கொண்டு சென்ற 25 வயது இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
ஒடிசாவைச் சேர்ந்த 25 வயதான திருமணமான பெண் ஒருவரை தொடர்பு கொண்ட இடைத்தரகர்கள், வாடகை தாயாக இருக்க ஒப்புக்கொண்டால் ரூ.10 லட்சம் தருவதாகக் கூறியுள்ளனர். அதற்கு அந்த பெண் ஒப்புக்கொண்டதை அடுத்து அவரும், அவரது கணவரும், அவர்களின் 4 வயது மகனும் ஹைதராபாத் அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கு பெண்ணின் கணவரும் மகனும் தனி பிளாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 26-ம் தேதி, அந்தப் பெண் தனது கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு தங்க விரும்பவில்லை என்றும், அந்த நபர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதால் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்பு ஒரு ஆணின் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி), தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஊடக அறிக்கையின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமை மீறப்பட்டது கடுமையான பிரச்சினை.
இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் நிலை உள்ளிட்ட விரிவான அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு தெலங்கானா மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநிலத்தில் வாடகைத் தாய் என்ற பெயரில் பெண்கள் துன்புறுத்தப்படுவது குறித்து மக்களிடம் இருந்து ஏதேனும் புகார்கள் இருந்தால், அதுபற்றி காவல்துறை அதிகாரிகளிடமிருந்தும் ஆணையம் அறிய விரும்புகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT