Published : 29 Nov 2024 03:56 PM
Last Updated : 29 Nov 2024 03:56 PM
பெங்களூரு: முஸ்லிம்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும் என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கர்நாடகாவின் விஸ்வ வொக்கலிகா மகா சமஸ்தான மடத்தின் குமார சந்திரசேகரநாத சுவாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் விவசாயிகள் பலரின் நிலங்களுக்கு உரிமை கோரி வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து கடந்த செவ்வாய்கிழமை பாரதிய கிசான் சங்கம் ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குமார சந்திரசேகரநாதா, “விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். வக்பு வாரியம் யாருடைய நிலத்தையும் உரிமை கோரலாம் என்று கூறப்படுவது பெரிய அநியாயம். யாரோ ஒருவரின் நிலத்தை யாரோ ஒருவர் பறிப்பது தர்மம் அல்ல. இதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். விவசாயிகளின் நிலம் விவசாயிகளிடமே இருப்பதை உறுதி செய்ய போராடுவது" அவசியம் என தெரிவித்தார்.
மேலும், முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், புதன்கிழமை, அவர் தனது இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். வாய் தவறி அவ்வாறு பேசிவிட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும், "முஸ்லிம்களும் நாட்டின் குடிமக்கள். எனவே, மற்றவர்களைப் போலவே வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கும் உண்டு" என்று அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
இதனிடையே, சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், குமார சந்திரசேகரநாத சுவாமி மீது உப்பர்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. "பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 299 (மத உணர்வுகளை தூண்டும் நோக்கம்)-ன் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்." என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT