Published : 29 Nov 2024 11:48 AM
Last Updated : 29 Nov 2024 11:48 AM
புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக, சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மகாயுதி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ள நிலையில், புதிய முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் நேற்றிரவு டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, "சந்திப்பு நன்றாகவும் நேர்மறையாகவும் இருந்தது. இதுவே முதல் சந்திப்பு. அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசித்தோம். மகாயுதியின் இன்னொரு கூட்டம் இருக்கும். இந்தக் கூட்டத்தில் முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். இந்த சந்திப்பு மும்பையில் நடைபெறும்" என்று தெரிவித்தார். மேலும் அவர், இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும்'' என்றும் கூறினார்.
அமித் ஷா உடனான சந்திப்பு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தேவேந்திர பட்னவிஸ், "முக்கியமான மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலின்போது, போர்க்களத்தில் பெரும் ஆதரவை அளித்ததற்காகவும், தொண்டர்களை பெரிதும் ஊக்கப்படுத்தியதற்காகவும் மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதற்கான மகாயுதி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவேந்திர பட்னவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவரிடையேதான் தற்போது போட்டி இருக்கிறது. அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள பெரிய கட்சி என்பதால் பாஜகவைச் சேர்ந்தவரே முதல்வராக வர வேண்டும் என அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் பாஜக வெற்றிபெற்ற போது முதல்வராக இருந்த தேவேந்திர பட்னவிஸ் மீண்டும் முதல்வராவார் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.
அதேநேரத்தில், மகாயுதி கூட்டணியின் முதல்வராக இருந்து கூட்டணியின் வெற்றிக்கு வித்திட்டவர் ஏக்நாத் ஷிண்டே என்பதால் அவரே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், “முதல்வர் பதவி தொடர்பாக பாஜக எந்த முடிவை எடுத்தாலும் அதை சிவசேனா முழுமையாக ஆதரிக்கும். நான் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவிடம் பேசினேன். என்னைப் பற்றிய எந்தக் கருத்தும் அவர்களின் முடிவைப் பாதிக்கக் கூடாது என்று அவர்களிடம் கூறினேன்” என்று ஷிண்டே புதன்கிழமை கூறியிருந்தார்.
முன்னதாக பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், "எங்கள் மகாயுதி கூட்டணியில் கருத்து வேறுபாடும் இல்லை. எப்போதும் கூட்டாக தான் முடிவெடுத்துள்ளோம். தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல்வர் பதவி குறித்து கூட்டாக முடிவு எடுக்கப்படும் என தேர்தலுக்கு முன் அறிவித்தோம்'' என கூறியிருந்தார்.
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 23 அன்று அறிவிக்கப்பட்டன. 280 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பாஜக 132 இடங்களைப் பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணிக் கட்சிகளான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான என்சிபி ஆகியவை முறையே 57 மற்றும் 41 இடங்களைப் பெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT