Published : 29 Nov 2024 09:14 AM
Last Updated : 29 Nov 2024 09:14 AM
புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது காஜா மொய்னுதீன் சிஷ்தி தர்கா. இந்த தர்காவுக்கு நாடு முழுவதிலும் இருந்து முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.
தர்கா இருந்த இடத்தில் சங்கட் மோர்ச்சன் மஹாதேவ் எனும் சிவன் கோயில் இருந்ததாகப் பல ஆண்டுகளாகப் புகார் உள்ளது. இதை குறிப்பிட்டு கடந்த 2022-ம் தேதி காங்கிரஸ் முதல்வராக இருந்த அசோக் கெலாட்டிடம் முதல் முறையாக புகார் அளிக்கப்பட்டது. மகாரானா பிரதாப் சேனா எனும் அமைப்பினர் அளித்த இந்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனினும், தேர்தல் நேரங்களில் இந்த புகாரை இந்துத்துவா அமைப்புகள் எழுப்பி வந்தன. இது தற்போது அஜ்மீர் நீதிமன்றத்தில் வழக்காக ஏற்கப்பட்டுள்ளது. தர்காவின் உள்ளே கள ஆய்வு நடத்த கோரி டெல்லியில் வசிக்கும் இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா ஒரு மனுவை அளித்திருந்தார். இந்த மனுவை அஜ்மீர் சிவில் செஷன்ஸ் நீதிமன்ற மூத்த நீதிபதி மன்மோகன் சண்டேல் விசாரித்தார்.
கடந்த நவம்பர் 25-ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களாக விசாரணை நடைபெற்றது பின்னர் இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
இதையடுத்து, தர்கா நிர்வாகக் குழு, ராஜஸ்தான் மாநில சிறுபான்மைத் துறை மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணை டிசம்பர் 5-ம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது. கடந்த 1910-ல் அஜ்மீர்வாசியான நீதிபதி ராம் விலாஸ் ஷர்தா என்பவர் ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், சிவன் கோயில் இருந்த இடத்தை இடித்து காஜா மொய்னுதீன் சிஷ்தி தர்கா கட்டியதாகக் குறிப்புகள் உள்ளன.
இந்நூலை ஆதாரமாக கொண்டு விஷ்ணு குப்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதில் கோயிலின் சில கலை பொருட்கள் தர்காவில் உள்ள பகுதிகளும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன் கீழ் இந்த கள ஆய்வு வராது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...