Published : 29 Nov 2024 08:09 AM
Last Updated : 29 Nov 2024 08:09 AM
புதுடெல்லி: மகாராஷ்டிராவின் புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர்.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஆளும் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அணி 57 தொகுதிகளிலும் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்தன.
மகாராஷ்டிராவின் தற்போதைய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே உள்ளார். துணை முதல்வர்களாக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் உள்ளனர். புதிய முதல்வராக பதவியேற்பதில் ஷிண்டே, பட்னாவிஸ் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த சூழலில் கடந்த 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் ஏக்நாத் ஷிண்டே தொலைபேசியில் பேசினார். இதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஷிண்டே, "பிரதமர் மோடியின் முடிவை ஏற்பேன். பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் முதல்வராக பதவியேற்பதை ஏற்றுக் கொள்வேன்" என்று பகிரங்கமாக அறிவித்தார்.
இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் டெல்லியில் நேற்று இரவு சந்தித்து பேசினர். அப்போது மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: மகாராஷ்டிராவின் புதிய அமைச்சரவையில் 43 பேரை அமைச்சர்களாக நியமிக்க முடியும். இதில் பாதி பேர் பாஜகவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 12 கேபினட் அமைச்சரவை பதவிகள் வழங்கப்படும். ஊரக வளர்ச்சி, பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை ஆகிய முக்கிய இலாகாக்கள் ஷிண்டே அணிக்கு ஒதுக்கப்படும்.
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவில் பதவியேற்கக்கூடும். ஷிண்டே அணியை சேர்ந்த ஒருவர், அஜித் பவார் அணியை சேர்ந்த ஒருவர் துணை முதல்வர்களாக பதவியேற்பார்கள்.
துணை முதல்வர் பதவியை ஏற்க ஏக்நாத் ஷிண்டே விரும்பவில்லை. எனவே அவரது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே துணை முதல்வராக பதவியேற்கக்கூடும். அஜித் பவார் தரப்பில் அவரே துணை முதல்வராக பதவியேற்பார். இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT