Published : 29 Nov 2024 04:39 AM
Last Updated : 29 Nov 2024 04:39 AM

இண்டியா கூட்டணியின் ஒற்றுமை வெற்றி பெற்றுள்ளது: 4-வது முறையாக முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரன் பெருமிதம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் 4-வது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் சந்தோஷ் கங்வார், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு கடந்த 13, 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 34, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதா தளம் 4, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்-எல்) 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஒட்டுமொத்தமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு 56 இடங்கள் கிடைத்தன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 24 தொகுதிகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து, ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த 24-ம் தேதி ஆளுநர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து ஆட்சிஅமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள மொரபாடி மைதானத்தில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. ஜார்க்கண்டின் 14-வது முதல்வராக ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு ஆளுநர் சந்தோஷ் கங்வார், பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற் றது இது 4-வது முறை. பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஹேமந்த் சோரனின் தந்தையும், முன்னாள் முதல்வருமான சிபு சோரனுக்கு தற்போது 80 வயது ஆகிறது. விழாவில் அவரை முதல்வர் ஹேமந்த், கைத்தாங்கலாக அழைத்து வந்தார். அப்போது ஹேமந்த் கூறும்போது, “இது வரலாற்று சிறப்புமிக்க தினம். இண்டியா கூட்டணியின் ஒற்றுமை வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மக்களை யாராலும் பிரிக்க முடியாது. நாங்கள் யாருக்கும் தலைவணங்க மாட்டோம்’’ என்றார்.

கூட்டணியில் மோதல்: அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை பெறுவதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால், நேற்றைய விழாவில், அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. இதுகுறித்து ஜேஎம்எம் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: புதிய அமைச்சர்களை நியமிக்கும் விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டிருப்பது உண்மைதான். இதற்கு தீர்வு காண, கடந்த 2019-ம் ஆண்டில் பின்பற்றிய நடைமுறையையே தற்போதும் அமல்படுத்த உள்ளோம். இதன்படி, ஜேஎம்எம் கட்சியை சேர்ந்த 6 பேர், காங்கிரஸை சேர்ந்த 4 பேர், ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும். அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x