Published : 28 Nov 2024 01:39 PM
Last Updated : 28 Nov 2024 01:39 PM
கொல்கத்தா: வங்கதேச இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாங்கள் மத்திய அரசோடு இருக்கிறோம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, “எந்த மதமும் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் மூத்த துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, இஸ்கான் அமைப்பினருடன் பேசினேன். இது வேறு ஒரு நாட்டின் விவகாரம். எனவே, இதில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் நாங்கள் அவர்களுடன் (மத்திய அரசு) இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் குறிவைக்கப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என வலியுறுத்தி ஓய்வுபெற்ற நீதிபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 75 பேர் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீரின் முன்னாள் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத், “ஓய்வுபெற்ற நீதிபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் உள்பட சுமார் 75 பேர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். வங்கதேசத்தில் இந்துக்கள் அட்டூழியங்களை எதிர்கொள்கிறார்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இது வங்கதேசத்தை மட்டும் பாதிக்காது. அதை சுற்றியுள்ள பிராந்தியத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். இது இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மொத்த பிராந்தியத்திலும் இது சிக்கலை ஏற்படுத்தும். இது ஒரு நாட்டின் உள்விவகாரம் அல்ல. எனவே, இது குறித்து ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகளில் முறையிட வேண்டும். பிரதமர் மோடி ஒரு உலகத் தலைவர். அவர் சொல்வதை மக்கள் கேட்கிறார்கள். எனவே, அவர் இதில் தலையிட வேண்டும். வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும். இதற்கு வெளியில் இருந்து உரிய அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.” என குறிப்பிட்டார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “வங்கதேசத்தில் இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்கு உரியது. இதுபோன்ற தாக்குதல்கள் மனித குலத்துக்கு எதிரானது. வங்கதேச அரசின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முகம்மது யூனுஸ் அடிப்படைவாதிகளின் பிடியில் உள்ளார். அங்கு இந்துக்கள் தாக்கப்படும் விதம் மனித குலத்துக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்.
இந்துக்கள் குறிவைக்கப்படுவது, இந்து மதத் தலைவர்கள் கைது செய்யப்படுவது ஆகிய சம்பவங்கள், பாகிஸ்தானைப் போலவே வங்கதேச இடைக்கால அரசாங்கத்திலும் அடிப்படைவாதிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அங்கு இந்துக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் இழைக்கப்படுகின்றன. வங்கதேசத்தில் நடக்கும் அட்டூழியங்களுக்கு அனைத்து இந்துக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள மஹமந்த்லேஸ்வர் சுவாமி கிருஷ்ணானந்த், “வங்கதேசத்தின் தற்போதைய அரசு தீவிர முஸ்லிம்களின் அரசு. ஷேக் ஹசீனா ஆட்சியில் இருக்கும் வரை, தேசம் ஜனநாயக ரீதியாக இயங்கி வந்தது. வங்கதேச இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்து கோயில்கள் சேதப்படுத்தப்படுகின்றன. இந்த விவகாரத்தில் இந்துக்களின் பாதுகாப்பிற்காக ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT