Published : 28 Nov 2024 11:59 AM
Last Updated : 28 Nov 2024 11:59 AM
புதுடெல்லி: அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியதை அடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை கூடியதும், மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வத்ரா, வசந்தராவ் சவுதான் ஆகியோர் உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. நெடுஞ்சாலைத் துறை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். எனினும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
கேள்வி நேரம் முக்கியமானது என்றும், உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்கப்படும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வது சரியல்ல, மக்கள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், நான் வாய்ப்புகளை வழங்குவேன், அவை முறைப்படி இயங்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தொடர்ந்து வலியுறுத்தினார். எனினும், அவையில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதை அடுத்து அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
இதே விவகாரம் மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை என 16 பிரச்சினைகள் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை ஏற்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன். அவையில் கேள்வி நேரம் தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். எனினும், பிரிவு 267ஐ சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்பி மனோஜ் திவாரி பேசினார். இதையடுத்து, அவையை நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைப்பதாக ஜக்தீப் தன்கர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT