Published : 28 Nov 2024 10:15 AM
Last Updated : 28 Nov 2024 10:15 AM
புதுடெல்லி: மகாராஷ்டிரா முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் இன்றளவும் நீடித்துவரும் சூழலில் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவுடன் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, என்சிபி-யின் அஜித் பவார் ஆகியோர் சந்திக்கின்றனர். இந்த சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் அறிவிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமோக வெற்றி மட்டும் போதுமா? 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில், ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாஜக, ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக 149 தொகுதிகளில் போட்டியிட்டு 132 தொகுதிகளைக் கைப்பற்றியது சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் (அஜித்) 41 இடங்களிலும் வெற்றியை பதிவு செய்தன.
ஆனால், மகாயுதி கூட்டணியின் மெகா வெற்றி பெற்றது மட்டும் போதாது முதல்வர் யார் என்பதை தீர்மானிக்க என்பதுபோல் இன்றளவு அந்த சஸ்பென்ஸ் நிலவுகிறது. பட்னாவிஸ், ஷிண்டே, பவார் மூன்று பேருமே ஒருவருக்கொருவர் சற்றும் சளைக்காத சக்தி வாய்ந்த தலைவர்களாக இருப்பதாலேயே இந்த அதிகார யுத்தம் மகாயுதியில் மவுனமாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய சந்திப்புக்குப் பின்னர் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு வரும். முதல்வர் யார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சி வரிசையில் கூட.. மகாயுதியில் அமோக வெற்றி என்றால் மகாவிகாஸ் படுதோல்வி அடைந்துள்ளது. சிவசேனா (உத்தவ்), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஒட்டுமொத்தமாக 46 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அந்தக் கூட்டணியில் உள்ள 3 கட்சிகளில் ஒன்றுகூட பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் இனி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை ஏற்கக் கூடாது என உத்தவ் தாக்கரேவுக்கு சிவசேனா எம்எல்ஏ.,க்கள் நெருக்கடி கொடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT