Published : 28 Nov 2024 03:02 AM
Last Updated : 28 Nov 2024 03:02 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இங்கு விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கியின் கோயில் இருந்தது என சம்பல் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 19-ம் தேதி அந்த மனுவை விசாரித்த சிவில் செஷன்ஸ் நீதிபதி, அதே தினத்தில் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி மசூதியில் நடை பெற்ற ஆய்வு மீண்டும் கடந்த நவம்பர் 24-ம் தேதி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், முஸ்லிம்களின் ஒரு முக்கிய அமைப்பான ஜமாத்-எ-உலாமா ஹிந்த் (ஜேயுஎச்) தலைவர் மவுலானா மஹமூத் மதானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சம்பலில் காவல் துறை நடத்திய அராஜகத்தை ஜேயுஎச் கண்டிக்கிறது. அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பில், அயோத்தியில் எந்த மசூதியும் கட்டப்படவில்லை என்ற வாதத்தை முஸ்லிம்கள் கசப்பாக விழுங்க வேண்டியிருந்தது. எனினும், இந்த உத்தரவால் நாட்டில் அமைதி நிலவும் எனக் கருதப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்புக்கு பிறகு நாட்டில் உள்ள மசூதிகளின் கீழ் கோயில்கள் இருப்பதாக தற்போது நிறுவ முயற்சிக்கப்படுகிறது. இது, நாட்டின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு எதிரிகளாக மதவாத சக்திகள் இருப்பதை காட்டுகிறது.
சட்டம் என்பது அனைவருக்கும் ஒரே வகையில் இருக்க வேண்டும். மதத்தின் அடிப்படையில் பொதுமக்கள் மீது காழ்ப்புணர்வு இருக்க கூடாது. மத்திய அரசின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ஐ மீறி கீழ் நீதிமன்றங்களில் ஆய்வுக்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த சட்டம் தொடர்பான வழக்கில் ஓராண்டாக எந்த விசாரணையும் நடைபெறவில்லை. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விரைந்து விசாரித்து முடிவு எடுக்க வேண்டும். இதற்காக, எங்கள் ஜேயுஎச் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. இதில், அனைத்து மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT