Published : 28 Nov 2024 02:35 AM
Last Updated : 28 Nov 2024 02:35 AM

கடற்படையின் நீர்மூழ்கி திட்டங்களுக்கு தொழில்நுட்பத்தை வழங்கும் பிரான்ஸ்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை பிரான்ஸ் வழங்க உள்ளது.

இந்திய கடற்படையை விரிவாக்கம் செய்வதற்காக, ‘திட்டம் 66’ என்ற பெயரில் 66 போர்க் கப்பல்களை கட்ட திட்டமிட்டுள்ளது. இதன்படி 50 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதுபோல ‘திட்டம் 77’ என்ற பெயரில் அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பலை வங்கவும் கடற்படை திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டங்களுக்கு அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை பிரான்ஸ் வழங்க உள்ளது. பாரம்பரிய உந்துவிசை அமைப்புகளுக்கு அதிநவீன மாற்றாக விளங்கும் பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பம் ஏற்கெனவை பிரான்ஸின் பாராகுடா வகை நீர்மூழ்கியில் செயல்பட்டு வருகிறது. இது நீர்மூழ்கிகள் எழுப்பும் ஒலியின் அளவைக் குறைக்கிறது. இதன்மூலம் கப்பலின் அமைதியான மற்றும் எதிரிகளின் கவனத்தை ஈர்க்காமல் செயல்படும் திறன் அதிகரிக்கும்.

இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள நீர்மூழ்கிகள் மிகவும் சப்தமற்றவையாக மாறும். இதனால் எதிரிகளால் இதன் இருப்பிடத்தை அறிய முடியாது. மேலும் நீர்மூழ்கிகளுக்கான சூழ்ச்சித் திறனை அதிகரிக்கவும் இந்த தொழில்நுட்பம் உதவும். இது இந்திய கடற்படையின் நீருக்கடியிலான போர் திறனை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.

மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு வலிமையான சக்தியாக இந்திய கடற்படை உருவெடுக்கும். இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க பிரான்ஸ் முன்வந்திருப்பது, இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்புத் துறை தொடர்பான உறவு வளர்ந்து வருகிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

மேலும் வான், கடல் மற்றும் தரைவழி கூட்டு ராணுவ பயிற்சிகளை இரு நாட்டு ராணுவமும் மேற்கொள்கின்றன. இதுதவிர, ராணுவ தளவாடங்களை வடிவமைப்பது, மேம்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வதிலும் இணைந்து செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x