Published : 28 Nov 2024 01:50 AM
Last Updated : 28 Nov 2024 01:50 AM
அமராவதி: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங் கள் தொடர்ந்து நடைபெறுவதுடன் பல இந்து கோயில்களும் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. அடக்குமுறைகள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்கான் கோயில் மதகுருவான சின்மய் கிருஷ்ண தாஸை அந்நாட்டு போலீஸார் டாக்கா விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
இந்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களின் மதகுருவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இஸ்கான் அமைப்பு கோரியுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன்கல்யாண் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: இந்துக்களை குறி வைத்து நடத்தப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை அனைவரும் கூட்டாக சேர்ந்து கண்டிக்க வேண்டும். இதற்காக நாம் போராடவும் தயாராக இருக்க வேண்டும். வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் இது போன்ற மதம் சம்பந்தப்பட்ட போராட்டங்களை அந்நாட்டு அரசு உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வங்கதேசம் உருவாக இந்திய ராணுவத்தினர் பலர் உயிர் தியாகங்களை செய்துள்ளனர் என்பதை அந்நாட்டு தற்காலிக அதிபர் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, டெல்லியில் பவன் கல்யாண் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், பிரதமர் மோடியை நேற்று அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் பல முறைகேடுகள், ஊழல்கள் தலைவிரித்தாடின. அதானி குழுமத்திடம் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது அமைச்சர்கள் சிலர் ரூ.1,750 கோடி லஞ்சம் பெற்றதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் கலந்தாலோசித்த பின்னர் கண்டிப்பாக இந்த விவகாரம் தொடர்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திராவில் வெட்டி கடத்தப்பட்டு, அண்டை மாநிலங்களில் பிடிபட்ட செம்மரங்களை கையகப்படுத்துவது தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டியஅவசியம் உள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT