Published : 27 Nov 2024 06:55 PM
Last Updated : 27 Nov 2024 06:55 PM
புதுடெல்லி: வங்கதேசத்தில் இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஐநா தலையிட வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்தை பாஜக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங், "வங்கதேசத்தில் இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்கு உரியது. இதுபோன்ற தாக்குதல்கள் மனித குலத்துக்கு எதிரானது. வங்கதேச அரசின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முகம்மது யூனுஸ் அடிப்படைவாதிகளின் பிடியில் உள்ளார். அங்கு இந்துக்கள் தாக்கப்படும் விதம் மனித குலத்துக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்.
இந்துக்கள் குறிவைக்கப்படுவது, இந்து மதத் தலைவர்கள் கைது செய்யப்படுவது ஆகிய சம்பவங்கள், பாகிஸ்தானைப் போலவே வங்கதேச இடைக்கால அரசாங்கத்திலும் அடிப்படைவாதிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் போன்றவர்கள் வங்கதேசத்தில் இந்துக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவலைப்படவில்லை. அங்கு இந்துக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் இழைக்கப்படுகின்றன. வங்கதேசத்தில் நடக்கும் அட்டூழியங்களுக்கு அனைத்து இந்துக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதற்கு திரிணமூல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "வங்கதேச இந்துக்கள் அட்டூழியங்களுக்கு ஆளாக்கப்படுவது கவலை அளிக்கிறது. இது நடக்கக்கூடாது. கண்டிக்கிறேன். இந்த விஷயத்தில் அரசு தீவிரமாக தலையிட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
வங்கதேசத்தில் இந்துக்களின் நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது என காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்களுக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். சில நாட்களுக்கு முன்பு, இஸ்கான் துறவி ஒருவர் கைது செய்யப்பட்டார், அவரது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் மோடி எங்கே சென்றுள்ளார்?
பிரதமர் மோடி இருந்த போதிலும் அண்டை நாட்டில் ஏன் இப்படி ஒரு நிலை? உக்ரைன், ரஷ்யா, இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மத்தியஸ்தம் செய்ய செல்கிறார். ஆனால், அவர் பொறுப்பேற்றதில் இருந்து அண்டை நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு சரிந்து வருகிறது. ஆனால், அவர் அமைதியாக இருக்கிறார். இன்று, நிலைமையைத் தீர்க்க உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை" என்று விமர்சித்தார்.
வங்கதேசத்தில் இஸ்கான் துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்தை நோக்கி பாஜக பேரணி நடத்தியது. மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் பங்கேற்று வங்கதேச அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் அக்னிமித்ரா பால், "வங்கதேசத்தில் கொல்லப்படும் நமது இந்து சகோதர, சகோதரிகளைப் பற்றி கவலை கொள்கிறோம். குறிப்பாக சின்மோய் தாஸ் பிரபு கைது செய்யப்பட்டது மிகவும் கவலை அளிக்கிறது. அவருக்கு ஏதாவது நடந்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். வங்கம் அமைதியாக இருக்காது; வங்காள இந்துக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள்" என தெரிவித்தார்.
வங்கதேச இஸ்கான் அமைப்பின் பொதுச் செயலாளர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் அங்குள்ள இந்துக்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் ஹைதராபாத்தில் உள்ள சில்கூர் பாலாஜி கோவிலில் பிரார்த்தனை நடைபெற்றது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் அர்ச்சகர் ரங்கராஜன், வங்கதேசத்தில் உள்ள இந்துக்களின் பாதுகாப்புக்காக இன்று பக்தர்களுடன் சேர்ந்து கூடுதலாக இரண்டு பிரார்த்தனைகள் செய்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் உள்ள மஹமந்த்லேஸ்வர் சுவாமி கிருஷ்ணானந்த், "வங்கதேசத்தின் தற்போதைய அரசு தீவிர முஸ்லிம்களின் அரசு. ஷேக் ஹசீனா ஆட்சியில் இருக்கும் வரை, தேசம் ஜனநாயக ரீதியாக இயங்கி வந்தது. வங்கதேச இந்து தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்து கோயில்கள் சேதப்படுத்தப்படுகின்றன. இந்த விவகாரத்தில் இந்துக்களின் பாதுகாப்பிற்காக ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT