Published : 27 Nov 2024 09:38 AM
Last Updated : 27 Nov 2024 09:38 AM
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை மற்றும் உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் பாஜக வெற்றிக்கு முஸ்லிம் வாக்குகளின் பிரிவு சாதகமாகி உள்ளது. மேலும், அக்கட்சிக்கு இந்துத்துவா மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) பிரச்சாரமும் கூடுதல் பலனை அளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் முஸ்லிம் வாக்குகள் 12 சதவீதமாக உள்ளது. இங்குள்ள 288 தொகுதிகளில் 38-ல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். இந்த 38 தொகுதிகளில் பாஜக கடந்த 2019 தேர்தலில் 11 தொகுதிகளில் வென்றிருந்தது. இது தற்போது 2024-ல் எண்ணிக்கை கூடி 14 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதே 38 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியானது 2019-ல் 11-ல் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 2024-ல் இந்த எண்ணிக்கை குறைந்து 5 எம்எல்ஏக்களை மட்டுமே காங்கிரஸ் பெற்றுள்ளது. இதன் பின்னணியில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்காமலே, அவர்களது தொகுதிகளில் பாஜக வளர்வதைக் காட்டுகிறது.
மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளில் இந்த முறை சுமார் 420 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்வேறு பெரிய, சிறிய கட்சிகளின் சார்பிலும், சுயேச்சையாகவும் போட்டியிட்டனர். இவர்களில் வெறும் 10 முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். வெற்றி சதவீதம் 2.5 ஆகும். இந்த 10 தொகுதிகளில் ஆளும் கூட்டணியான மகாயுதியின் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவில் 1, அஜித் பவாரின் என்சிபி-யில் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாடியின் காங்கிரஸ் 3, சிவசேனா (உத்தவ்) 1, சமாஜ்வாதி சார்பில் 2 முஸ்லிம்கள் வெற்றி பெற்றுள்ளனர். தனித்து போட்டியிட்ட ஹைதராபாத் எம்.பி-யான அசாதுத்தீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் 162 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 1972 பேரவை தேர்தலில் தேர்வான எம்எல்ஏக்களில் மிக அதிகமாக 13 முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 1980 மற்றும் 1999 பேரவை தேர்தலிலும் தொடர்ந்தது. 1995-ல் மட்டும் குறைந்த அளவாக 8 முஸ்லிம் எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த முறையும் 10 இடங்களைப் பெறுவதற்கு, முஸ்லிம்கள் இடையே ஒற்றுமையின்மை காரணமாகி வருகிறது.
முஸ்லிம் அதிகமுள்ள தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் முஸ்லிம்கள் போட்டியிடுவதே இதற்குக் காரணமாகும். மகாராஷ்டிராவின் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் பல்வேறு கட்சிகளில் உள்ளனர். எனினும், அக்கட்சிகளில் அவர்களது எண்ணிக்கை மற்றும் வாக்குகளின் பலத்தை பொறுத்து போட்டியிடும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
உத்தரப் பிரதேசத்தில் எப்படி? - உ.பி.யில் நடைபெற்ற 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பாஜக 7-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஒன்பதிலும் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர். குறிப்பாக குந்தர்கியில் 65 சதவிகித முஸ்லிம்கள் இருந்தும் அங்கு பாஜக, 1.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு பாஜக 30 வருடங்களுக்கு பின் முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளது.
அக்கட்சியின் வேட்பாளர் ராம்வீர் தாக்கூரை எதிர்த்த 11 வேட்பாளர்களும் முஸ்லிம்களே. கடந்த ஜூனில் முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா மற்றும் உபியில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலை சட்டப்பேரவை தேர்தலில் தலைகீழாகி விட்டது.
இதன் பின்னணியில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் ஒத்துழைப்பு மக்களவை தேர்தலில் கிடைக்காதது காரணம் எனப் புகார் இருந்தது. இந்த தேர்தலில் பாஜக - ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வேற்றுமைகள் களையப்பட்டன. இதன் பலனாக ஆர்எஸ்எஸ் தன் தீவிரப் பிரச்சாரத்தை ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நடத்தியது.
பாஜகவின் வழக்கமான இந்துத்துவா பிரச்சாரமும் அக்கட்சிக்கு பலனை அளித்துள்ளது. முக்கியமாக உ.பி. முதல்வர் யோகியின், ‘பட்டேங்கே தோ கட்டேங்கே’ (பிரிந்தால் இழப்பு), பிரதமர் நரேந்திர மோடியின், ‘ஏக் ஹை தோ சேஃப் ஹை’ (ஒற்றுமையாக இருப்பது பாதுகாப்பு) எனும் கோஷங்களும் பாஜக வெற்றிக்கு அடித்தளமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT