Published : 27 Nov 2024 02:37 AM
Last Updated : 27 Nov 2024 02:37 AM
கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று அதிகாலை கொச்சி சென்று கொண்டிருந்தது. திருச்சூர் அருகே நாட்டிகா என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதியது. பின்னர் அங்கு சாலையோரம் கூடாரம் அமைத்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர். நிற்காமல் சென்ற லாரியை உள்ளூர் மக்கள் விரட்டிச் சென்றனர். இதனால் ஒரு கி.மீ தூரம் தாண்டி அந்த லாரி நின்றது. அதன் ஓட்டுரையும், கிளீனரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் மது போதையில் இருந்தனர். விசாரணையில் லாரியை கிளீனர் ஓட்டியதாக தெரியவந்துள்ளது. அவரிடம் ஓட்டுநர் உரிமமும் இல்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் கூறுகையில், ‘‘ லாரி ஏறியதில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் தமிழகத்தில் உள்ள அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளக்கப்படும்’’ என்றார்.
திருச்சூரில் நாட்டிகா என்ற இடத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர் தங்கள் குடும்பத்துடன் கடந்த 2 மாதங்களாக கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். இவர்கள் பகலில் வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் சாலையோர கூடாரத்தில் தூங்கியுள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT