Published : 26 Nov 2024 09:02 PM
Last Updated : 26 Nov 2024 09:02 PM

‘பக்கா மாஸ்’ பட்னாவிஸ் Vs ‘பிஹார் மாடல்’ ஷிண்டே - மகாராஷ்டிர புதிய முதல்வர் யார்?

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கியதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர முதல்வர் பதவியை ஏற்கப் போவது யார் என்ற பரபரப்பு மாநில அரசியலில் நிலவுகிறது. ‘பிஹார் மாடல்’ அரசை ஷிண்டே தரப்பு முன்வைத்துள்ள நிலையில், தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என அடித்துச் சொல்கிறார்கள் பாஜகவினர்.

தற்போது பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் முதல்வர் பதவி பாஜகவுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. வெற்றியை தொடர்ந்து மகாராஷ்டிர பாஜகவின் முகமாக 'பக்கா மாஸ்’ காட்டிய தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை ஏற்பார் என்றும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு துணை முதல்வர் வழங்கும் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் திங்கள்கிழமை டெல்லிக்குச் சென்றார். அங்கு அவர், மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதில் ஏற்பட்டு உள்ள தாமதம் தொடர்பாகவும், அதற்கான தீர்வு குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர் செவ்வாய்க்கிழமை காலை மும்பை திரும்பினார்.

இதனிடையே, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் உள்ளிடோர் மும்பையில் உள்ள ராஜ்பவனில் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்தனர். அப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம், ஷிண்டே வழங்கினார். இதைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்கும் வரை காபந்து முதல்வராக நீடிக்குமாறு ஏக்நாத் ஷிண்டேவை, ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

என்னதான் நடக்கிறது? - மகாயுதி கூட்டணியில் முதல்வர் பதவி தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்ட நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோர ஆளுநரை, தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்ததாக தகவல் வெளியாகி இருந்தன. இதையடுத்து, புதிய முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, தங்கள் தரப்பு முடிவை இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்று விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து சிவசேனா செய்தித் தொடர்பாளர் நரேஷ் மஹஸ்கே கூறும்போது, “மகாராஷ்டிராவில் பிஹார் மாடல் திட்டத்தை அமல் செய்யலாம். பிஹாரில் பாஜக அதிக இடங்களில் வென்றிருந்தாலும், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார்தான் முதல்வராக பதவி வகிக்கிறார். எனவே, அந்த பிஹார் மாடலை இங்கும் அமல் செய்யலாம். அதைத்தான் எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் விரும்புகின்றனர். இது தொடர்பான முடிவை மகாயுதி கூட்டணியின் மூத்த தலைவர்கள்தான் எடுக்கவேண்டும்” என்றார்.

பாஜக மூத்த தலைவரும், மேலவை உறுப்பினருமான (எம்எல்சி) பிரவிண் தரேக்கர் கூறும்போது, “மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ்தான் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தேர்தலில் அந்தத் தீர்ப்பைத்தான் மக்கள் வழங்கியுள்ளனர். மக்களின் எண்ணத்தை பாஜக மேலிடம் நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மோடியின் பக்கம் மகாராஷ்டிர மக்கள் நிற்கின்றனர். எனவே, பட்னாவிஸ்தான் முதல்வராக வரவேண்டும்.

மகாராஷ்டிராவுக்கு ஒரு திறமைவாய்ந்த, நிர்வாகத் திறன் உள்ள தலைவர் தேவை. எனவே, பட்னாவிஸை முதல்வர் பதவியில் அமர தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அவர்தான், மகாயுதி கூட்டணியை ஒற்றுமையாக வழிநடத்தினார். கூட்டணிக் கட்சிகளுக்குத் தேவையான இடங்களை வழங்கி ஒற்றுமை காத்தார். கூட்டணிக் கட்சிகளுக்குள் எந்தப் பிளவும் ஏற்படாமல் அவர் நடந்துகொண்டார்” என்றார்.

தாமதமானால்..? - மகாராஷ்டிர சட்டப் பேரவையின் காலம் முடிவடையவுள்ளது. ஒருவேளை முதல்வர் பதவியேற்க கால தாமதம் ஏற்பட்டால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் நிலை வரலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, உடனடியாக முடிவெடுக்க இக்கட்டான சூழ்நிலையில் மகாயுதி கூட்டணி தலைவர்கள் உள்ளனர்.

அதே நேரத்தில் தற்போது நடைபெற்ற தேர்தல் முடிவுகள், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் பட்டியல் ஆகியவை மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமையே (நவம்பர் 24) வழங்கப்பட்டு விட்டது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 73-வது பிரிவின்படி, எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்ட அறிவிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதால், புதிய பேரவை அமைக்கப்பட்டதாக அர்த்தமாகிறது என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், புதிய அமைச்சரவை பதவியேற்காவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பாஜக மேலிடம் ஓரிரு நாளில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில், ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாஜக, ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக 149 தொகுதிகளில் போட்டியிட்டு 132 தொகுதிகளைக் கைப்பற்றியது சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் (அஜித்) 41 இடங்களிலும் வெற்றியை பதிவு செய்தன.

சிவசேனா (உத்தவ்), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஒட்டுமொத்தமாக 46 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அந்தக் கூட்டணியில் உள்ள 3 கட்சிகளில் ஒன்றுகூட பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x