Published : 26 Nov 2024 01:16 PM
Last Updated : 26 Nov 2024 01:16 PM
புதுடெல்லி: “நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் நடத்தையில் அரசமைப்பு லட்சியங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது அடிப்படைக் கடமைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற தேசிய இலக்கை அடைய உழைக்க வேண்டும்.” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு உரையுடன், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்.
இதே நாளில் கடந்த 1949-ல் அரசமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இந்தியா குடியரசு நாடாக மாறிய பிறகே கடந்த 1950 ஜனவரி 26-ம் தேதி அன்று அது நடைமுறைக்கு வந்தது. 75 ஆண்டுகளை முன்னிட்டு ஆண்டு முழுவதும் இது சார்ந்த கொண்டாட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது உரையில் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில், சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவும் அரசாங்கம் பல பணிகளைச் செய்துள்ளது. ஏழை மக்களுக்கு இப்போது சுகாதாரம், வீடு மற்றும் உணவு தொடர்பான பாதுகாப்பு கிடைத்துள்ளது.
பெண்கள் இடஒதுக்கீடு குறித்த சட்டம் நமது ஜனநாயகத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளது. இந்திய அரசமைப்பு ஒரு முற்போக்கு ஆவணம்.
நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் நடத்தையில் அரசமைப்பு லட்சியங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது அடிப்படைக் கடமைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், 2047-ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற தேசிய இலக்கை அடைய உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT