Published : 26 Nov 2024 02:34 AM
Last Updated : 26 Nov 2024 02:34 AM
திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு ஆய்வு குழு திருமலை, திருப்பதி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பிரசாதம் தயாரிக்க கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, விலங்கு கொழுப்பு கலந்த நெய்யை விநியோகம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க, முதலில் ஆந்திர அரசு சிறப்பு ஆய்வு குழுவினை நியமனம் செய்தது. இக்குழு 3 நாட்கள் விசாரணை நடத்திய சமயத்தில், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி உட்பட மேலும் சிலர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ அதிகாரிகள் தலைமையிலான குழுவினை நியமனம் செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, ஆந்திர அரசால் நியமனம் செய்யப்பட்ட விசாரணை குழு ரத்து செய்யப்பட்டு, 2 சிபிஐ அதிகாரிகளால் குழு நியமனம் செய்யப்பட்டது. அதன்படி, திருமலை, திருப்பதி மற்றும் திண்டுக்கல்லுக்கு சென்ற சிபிஐ குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இதில் 2-ம் நாளான நேற்று திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையம், தேவஸ்தான மார்க்கெட்டிங் துறை ஆகிய இடங்களில் விசாரணை மேற்கொண்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் இது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையம் எடுத்த நடவடிக்கைகள் என்னபது குறித்து விசாரிக்கப்பட்டது. அதேபோன்று, ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது நெய்க்கு டெண்டர்கள் போட்டவர்கள் யார் ? எத்தனை பேர் டெண்டரில் பங்கேற்றனர்? அவர்கள் குறிப்பிட்ட விலை என்ன ? யார் டெண்டர் எடுத்தது ? அந்த டெண்டரின் நிபந்தனைகள் என்னென்ன ? போன்றவை குறித்து சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஏற்கெனவே திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்தில் சிபிஐ தனிக்குழு நேரில் சென்று ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT