Published : 25 Nov 2024 06:12 PM
Last Updated : 25 Nov 2024 06:12 PM
புதுடெல்லி: அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், "அதானி குழுமம் ஊழல், லஞ்சம் மற்றும் நிதி முறைகேடு போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப விரும்பினோம். பிரிவு 267-ன் கீழ் அதானி பிரச்னையை எழுப்பினோம்.
சுமார் ரூ.2030 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணம் லஞ்சத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டுக்கு சொல்ல விரும்பினோம். இதற்குமுன் அதானி குழுமம் மீது, பங்குச் சந்தை முறைகேடு, நிதி மோசடி, ஷெல் நிறுவன மோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
மோடி எந்த நாட்டுக்குச் சென்றாலும் அதானிக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். இது மிக நீண்ட பட்டியல். இந்த விஷயங்களை அபையில் கொண்டு வருவது முக்கியம். இதனால் நாடு இழப்புகளைச் சந்தித்துள்ளது. இதனால் உலகம் நம் மீது நம்பிக்கை இழக்கக்கூடும். நாட்டைக் காப்பாற்றவே இந்தப் பிரச்சினையை எழுப்பினோம். 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மோடி வங்கதேசம் சென்றபோது, அதானி குழுமத்துக்கு அங்கு மின் திட்டம் கிடைத்தது. மலேசியா, இஸ்ரேல், சிங்கப்பூர், இலங்கை, நேபாளம், தான்சானியா, வியட்நாம், கிரீஸ் என மோடி எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் அதானிக்கு திட்டங்கள் கிடைத்தன.
மோடியின் ஆசி இல்லாவிட்டால் அதானியை எந்த நாடு தேர்ந்தெடுக்கும்? அனைத்தும் மோடியின் ஆதரவுடன் நடப்பதால், நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினையை எழுப்ப விரும்பினோம். இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே விதி 267 உருவாக்கப்பட்டது. உண்மை வெளிவர நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறோம் என்று மோடி கூறுகிறார். ஆனால், இதுபோன்ற ஊழல் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் நற்பெயருக்கு அவர்கள்தான் களங்கம் ஏற்படுத்துகிறார்கள்" என குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் முடக்கம்: முன்னதாக, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக மல்லிகார்ஜுன் கார்கே அறையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆலோசனை நடத்தினர். இதில், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்றனர். இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கே, “உலக அரங்கில் இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்துவதே அரசாங்கம் எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை.
கோடிக்கணக்கான சில்லறை முதலீட்டாளர்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த முதலீடுகள் ஆபத்தில் உள்ளன. எனவே, இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதையே இண்டியா கூட்டணிக் கட்சிகள் கோருகின்றன. இந்த நாட்டை ஏகபோகமாக நடத்த அனுமதிக்க முடியாது. இந்தியாவின் தொழில்முனைவோர்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும். சம வாய்ப்புகள், செல்வத்தின் சமமான பகிர்வு ஆகியவை கொண்டதாக தனியார் துறை விளங்க வேண்டும். அத்தகைய ஆரோக்கியமான சந்தை உந்துதல் போட்டியே நாட்டுக்குத் தேவை” என குறிப்பிட்டிருந்தார்.
பின்னணி என்ன? - முன்னதாக, ‘தமிழகம், ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெற அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்தது. இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் அதானி குழுமம் முதலீடுகளை பெற்றது’ என்று குற்றம் சாட்டி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அதானி குழும தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT