Published : 25 Nov 2024 03:50 PM
Last Updated : 25 Nov 2024 03:50 PM
புதுடெல்லி: அரசியலமைப்பின் முகப்புரையில் 'சோசலிஸ்ட், மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் இருப்பதை உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதி செய்தது.
1976-ம் ஆண்டு அரசியலமைப்பின் முகப்புரையில் 'சோசலிஸ்ட், மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகள் பின்னோக்கிய விண்ணப்பத்துடன் சேர்க்கப்பட்டதை எதிர்த்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு, இன்று தனது தீர்ப்பினை வழங்கியது.
“அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவு 368-ன் கீழ், அரசியல் சாசன முன்னுரையில் ‘சோசலிஸ்ட், மதச்சார்பற்ற’ என்ற பதங்கள் சேர்க்கப்பட்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அரசியல் சாசன முன்னுரையில் திருத்தம் மேற்கொள்ள பிரிவு 368 அதிகாரம் அளிக்கிறது. இந்த பிரிவின் கீழ் அரசியல் சாசனத்தின் முன்னுரையிலும்கூட திருத்தம் மேற்கொள்ள முடியும். எனவே, அரசியல் சாசன முன்னுரையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் செல்லும்.” என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த வழக்கு கடந்த 22-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, "இந்தியாவில் 'சோசலிசம்' என்ற கருத்து அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் ஒரு பொதுநல அரசைக் குறிக்கிறது. குடிமக்கள் மீது திணிக்கப்படும் சர்வாதிகாரக் கோட்பாடு அல்ல” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்தார்.
மேலும் அவர், “இங்கே சோசலிசம் என்பது அனைவருக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டிய பொதுநல அரசு என்று பொருள். தனியார் துறை இங்கு வளர்ச்சியடைவதை அது ஒருபோதும் தடுக்கவில்லை. நாம் அனைவரும் தனியார் துறையால் பலனடைந்துள்ளோம். சோசலிசம் பற்றிய எண்ணம் அரசியலமைப்பின் பல பிரிவுகளில் இயங்குகிறது. சோசலிசமும் மதச்சார்பின்மையும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி. பிரிவு 368 (அரசியலமைப்பைத் திருத்துவதற்கான அதிகாரம்) முன்னுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். இது அரசியலமைப்புக்கு புறம்பானது அல்லது வேறுபட்டது அல்ல.” என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT