Published : 25 Nov 2024 04:18 AM
Last Updated : 25 Nov 2024 04:18 AM
சட்டத்தில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்பதே கிடையாது. இந்த சூழ்ச்சியில் யாரும் சிக்கி கொள்ளக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இதன்படி 116-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இன்று தேசிய மாணவர் படையின் (என்சிசி ) தினமாகும். நானும் என்சிசி மாணவராக இருந்திருக்கிறேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவம் விலைமதிப்பில்லாதது. இளைஞர்களிடம் ஒழுங்கு, தலைமைப் பண்பு, சேவை உணர்வை என்சிசி ஏற்படுத்துகிறது. இயற்கை பேரிடர்களின்போது என்சிசி மாணவர்கள் தன்னலமின்றி சேவையாற்றுகின்றனர். தேசிய மாணவர் படையை மேலும் வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேள்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 2014-ம் ஆண்டில் 14 லட்சம் பேர் தேசிய மாணவர் படையோடு இணைந்திருந்தனர். இப்போது 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து உள்ளனர். முன்பு என்சிசியில் மாணவிகளின் எண்ணிக்கை 25 சதவீதமாக இருந்தது. இப்போது இது 40 சதவீதமாக அதிகரித்து உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் தேசிய மாணவர் படையில் இணைய வேண்டுகிறேன்.
வரும் ஜனவரி 12-ம் தேதி சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த தினம் ஆகும். இந்த முறை விவேகானந்தர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். இதையொட்டி டெல்லியில் நடைபெறும் விழாவில் நாடு முழுவதும் இருந்து 2,000 இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
உத்தர பிரதேசத தலைநகர் லக்னோவை சேர்ந்த வீரேந்திரா என்பவர் முதியோருக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றினை பெற்று தருகிறார். மத்திய பிரதேச தலைநகர் போபாலை சேர்ந்த மகேஷ், செல்போன் வாயிலாக பணம் செலுத்தும் நடைமுறைகளை முதியோருக்கு கற்றுக் கொடுக்கிறார்.
கடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி குறித்து மக்களிடம் எடுத்துரைத்தேன். இந்த விழிப்புணர்வு முயற்சியை குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ராஜீவ் முன்னெடுத்து செல்கிறார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி குறித்து மக்களிடம் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த மோசடியில் முதியோரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். சட்டத்தில் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்பதே கிடையாது. இதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இது ஒரு சூழ்ச்சி. இந்த சூழ்ச்சியில் யாரும் சிக்கிக் கொள்ளக் கூடாது. இதுதொடர்பாக இளைய சமுதாயத்தினர், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
சென்னை நூலகம்: புத்தகங்கள், மனிதனின் மிகச் சிறந்த நண்பன். நூலகத்தைவிட சிறப்பான இடம் வேறு எதுவும் கிடையாது. சென்னையில் சிறாருக்காக ஒரு நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் பெயர் பிரக்ருத் அறிவகம். இந்த நூலகத்தை அமைத்தவர் ஸ்ரீராம் கோபாலன். வெளிநாட்டில் அவர் பணியாற்றியபோது சிறாரின் படிப்பு மற்றும் கற்றல் பழக்கத்தை மேம்படுத்துவது குறித்து சிந்தித்தார். நாடு திரும்பிய பிறகு அவர், பிரக்ருத் அறிவகத்தை உருவாக்கினார். தற்போது அங்கு 3,000-க்கும் அதிகமாக புத்தகங்கள் இருக்கின்றன, இந்த நூலகம் சிறாரை கவர்ந்திழுக்கிறது. கதை சொல்லும் அமர்வு, நினைவாற்றல் பயிற்சி, ரோபோட்டிக்ஸ், மேடைப் பேச்சு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நூலகத்தில் நடைபெறுகின்றன.
கயானா இந்திய வம்சாவளியினர்: தென் அமெரிக்க நாடான கயானாவில் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.பாரதத்தில் இருந்து பல ஆயிரம் கி.மீ. தொலைவில் இருக்கும் கயானா, மினி பாரதமாக காட்சியளிக்கிறது. சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்பு பாரதத்தில் இருந்து கயானாவுக்கு தொழிலாளர்களாக சென்ற இந்தியர்கள் இன்று அந்த நாட்டின் அரசியல், வியாபாரம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் கோலோச்சுகிறார்கள். கயானாவின் தற்போதைய அதிபர் இர்ஃபான் அலியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
“அம்மாவின் பெயரில் ஒரு மரம் நடுவோம்” என்ற இயக்கத்தில் ஐந்தே மாதங்களில் 100 கோடி மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. இது ஒரு புதிய சாதனை ஆகும். அனைத்து மொழிகளிலும், கலாச்சாரத்திலும் சிட்டுக்குருவி தொடர்பான சம்பவங்கள், கதைகள் இருக்கின்றன. இன்று நகரங்களில் மிக அரிதாகவே சிட்டுக்குருவி காணப்படுகிறது. இந்த பறவையை மீண்டும் மீட்டெடுக்க சில வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையைச் சேர்ந்த கூடுகள் அறக்கட்டளையானது, சிட்டுக்குருவியின் எண்ணிக்கையைப் பெருக்க, பள்ளிக் குழந்தைகளைத் தங்கள் இயக்கத்தில் சேர்த்து உள்ளது. சிட்டுக்குருவியின் கூட்டை எவ்வாறு கட்டுவது என்பது தொடர்பாக குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளில் இந்த அமைப்பு, சிட்டுக்குருவிகளுக்காக 10,000 கூடுகளை உருவாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டால், சிட்டுக்குருவி கண்டிப்பாக மீண்டும் நமது வாழ்க்கையின் அங்கமாக ஆகி விடும்.
அரசு அலுவலகங்களில் தேவையற்ற பொருட்களை அகற்ற சிறப்பு தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது. இதன்மூலம் அரசு அலுவலகங்கள் இப்போது தூய்மையாக காட்சியளிக்கிறது. மும்பையை சேர்ந்த அக்சரா, பிரக்ருதி என்ற இரு இளம்பெண்கள், குப்பைகளில் வீசப்படும் துண்டு துணிகளில் இருந்து பைகள், தொப்பிகளை தயாரித்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தின் கான்பூரில் கங்கை நதி கரைகளில் இருந்து குப்பைகளை சேகரிக்கும் இளைஞர்கள்,அவற்றை மறுசுழற்சி செய்து பாதுகாப்பு வேலிகளை தயாரித்து வருகின்றனர். இதுபோன்ற சிறிய முயற்சிகள் மிகப்பெரிய வெற்றிக்கு வித்திடுகின்றன. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT