Published : 24 Nov 2024 12:54 PM
Last Updated : 24 Nov 2024 12:54 PM
மும்பை: நடந்து முடிந்த மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலில் பல வேட்பாளர்கள் நூலிழை வித்தியாசத்தில் தங்களின் ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 பேரவைத் தொகுதிகளுக்கு நவ.20ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது.
மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளின் படி, நாசிக் மாவட்டத்தின் மத்திய மலேகான் தொகுதியின் எம்எல்ஏவும் ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளருமான முஃப்தி முகம்மது இஸ்மாயில் அப்துல் காலிக், தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்தியன் செக்யுலர் லார்ஜஸ்ட் அசம்ப்ளி ஆஃப் மகாராஷ்டிரா கட்சியின் ஆஷிஃப் சேக் ரஷீத்-ஐ 162 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
பண்டாரா மாவட்டத்தின் சகோலி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரும் மாநில காங்கிரஸ் தலைவருமான நானா படோல், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அவினாஷ் பிரம்மங்கரை 208 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி கொண்டுள்ளார்.
அதேபோல் நவி மும்பையின் பதேல்பூர் தொகுதியில பாஜக வேட்பாளர் மந்தா மத்ரே 377 வாக்குகள் வித்தியாத்திலும், புல்தானா தொகுதியில் போட்டியிட்ட சிவ சேனா வேட்பாளர் சஞ்சய் கெய்க்வாட் 841 வாக்குகள் வித்தியாசத்திலும் தங்களின் வெற்றியை உறுதிப் படுத்தியுள்ளனர்.
கர்ஜத் - ஜம்கத்தின் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ரோகித் பவார் 1,243 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை தக்கவைத்துக்கொண்டுள்ளார். மாநில அமைச்சரும் என்சிபி வேட்பாளருமான திலிப் வால்சே பாடீல் அபேகான் தொகுதியில் 1,523 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிராவின் அமைச்சரும், சிவ சேனா வேட்பாளருமான தானாஜி சாவந்த் பராந்தா தொகுதியில் 1,509 வாக்குகள் வித்தியாசத்திலும், மற்றொரு அமைச்சரும் பாஜக வேட்பாளருமான அதுல் கிழக்கு அவுரங்காபாத் தொகுதியில் 2,161 வாக்குகள் வித்தியாசத்தில் தங்களின் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT