Published : 24 Nov 2024 12:48 PM
Last Updated : 24 Nov 2024 12:48 PM

‘‘மாகாராஷ்டிராவில் காங். பெற்ற மிக மோசமான தோல்வி இது’’ - பிரித்விராஜ் சவான் வேதனை

பிரித்விராஜ் சவான் | கோப்புப்படம்

மும்பை: "மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பேரவைத் தேர்தல்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான தோல்வி இது" என்று மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரித்விராஜ் சவுகான் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் தோல்வி குறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான், "பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் மகாயுதி அரசின் லட்கி பஹின் யோஜனா திட்டம் கிராமப்புற வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது. மகா விகாஸ் அகாடியின் துருவமுனை பிளவு நகர்புற வாக்காளர்களையும் பிரித்தது.

மாநிலத்தில் புதிய அலையோ அல்லது குளறுபடியோ ஏற்பட்டதா என்று கூறுவது மிகவும் கடினம். நான் எனது தெற்கு கராட் தொகுதியில் 5 - 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என எதிர்பார்த்தேன். ஆனால், மகாயுதி வேட்பாளர் 40,000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த 1977 மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் 20-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றதே இதுவரையிலான மோசமான தோல்வியாக இருந்தது. இப்போது ஏற்பட்ட தோல்வி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமானது.

தேர்தல் தோல்வி குறித்து மேலிடத்துடன் விவாதிக்க டெல்லி சென்றுள்ள மாகாராஷ்டிராவுக்கான தேர்தல் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலாவுடன் நான் பேசினேன். மக்களைச் சந்திப்பதற்காக நான் கராட்டில் இரண்டு நாட்கள் தங்கி இருப்பேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் சத்ரா மாவட்டத்தின் தெற்கு கராட் தொகுதியில் போட்டியிட்ட பிரித்விராஜ் சவுகானை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அதுல் போஸ்லே 39,355 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இந்த பேரவைத் தேர்தலில் 101 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 16 இடங்களை மட்டுமே கைபற்றி தனது மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. மாராஷ்டிராவில் உள்ள 288 பேரவைத் தொகுதிகளுக்கு நவ.20ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x