Published : 24 Nov 2024 12:03 PM
Last Updated : 24 Nov 2024 12:03 PM
புதுடெல்லி: நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் நோக்கில் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மைக் குழு அறையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர் அனுப்பிரியா படேல் உள்ளிட்டோர் அரசு சார்பில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் எம்பிக்கள் பிரமோத் திவாரி, ஜெயராம் ரமேஷ், பிஜூ ஜனதா தள எம்பி சஸ்மித் பத்ரா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி மிதுன் ரெட்டி, சமாஜ்வாதி கட்சி எம்பி ராம்கோபால் யாதவ், தெலுங்கு தேசம் கட்சியின் லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20 அன்று நிறைவடைகிறது. நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினம் என்பதால், அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு விழா, நாடாளுமன்ற கட்டிடத்தின் (சம்விதன் சதன்) மைய மண்டபத்தில் கொண்டாடப்பட உள்ளது. எனவே அன்றைய தினம் மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகள் நடைபெறாது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரமோத் திவாரி, "ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் தினமும் தீவிரவாத செயல்கள் நடந்து வருகின்றன. தேசிய நலன் சார்ந்த பல விஷயங்களை முன்வைத்துள்ளோம். அதானி விவகாரத்துக்குப் பிறகு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு கவலை அளிக்கிறது. நாங்கள் பிரச்சினைகளை எழுப்புவோம். பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் எங்களது ஆர்வம் உள்ளது. ஒருமித்த கருத்து இருந்தால் விவாதம் நடத்த வேண்டும், இல்லை என்றால் சட்டப்படி ஆளுங்கட்சியுடன் கலந்தாலோசிப்போம்" என தெரிவித்தார்.
இந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது, தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணையில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றும், இந்த அமர்வின் போது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT