Published : 24 Nov 2024 03:17 AM
Last Updated : 24 Nov 2024 03:17 AM
கர்நாடகாவில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் பாஜக, மஜத கூட்டணியை வீழ்த்தி காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக இருந்த சென்னப்பட்டணா, சிகாவுன், சந்தூர் ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட நிலையில், எதிர்க்கட்சியான பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலையில் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காலை 9 மணி முதலே 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்று முன்னிலை வகித்தனர்.
சென்னபட்டணாவில் பாஜக, மஜத கூட்டணியின் வேட்பாளரும் மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகனுமான நிகில் கவுடா, காங்கிரஸ் வேட்பாளர் சி.பி.யோகேஸ்வரை விட அனைத்து சுற்றுகளிலும் குறைந்த வாக்குகளே பெற்றார். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சி.பி.யோகேஷ்வர் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நிகில் கவுடாவை தோற்கடித்தார். தொடர்ந்து 3-வது முறையாக நிகில் கவுடா தோல்வி அடைந்ததால் அவரது கட்சியினர் சோகம் அடைந்தனர்.
சிகாவுன் தொகுதியில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் மகன் பாரத் பொம்மையை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது பதான் எதிர்த்து போட்டியிட்டார். அங்கு இருவரிடமும் பலத்த போட்டி நிலவிய நிலையில் இறுதியில், யாசிர் அகமது பதான் 13 ஆயிரத்து 466 வாக்குகள் வித்தியாசத்தில் பரத் பொம்மையை தோற்கடித்தார். இதனால் பசவராஜ் பொம்மையின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
சந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பங்காரு ஹனுமந்தாவை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் துக்காராமின் மனைவி அன்னபூர்ணா போட்டியிட்டார். இந்த தொகுதியில் இருவரிடமும் கடும் போட்டி நிலவியது. முதல் 2 சுற்றுகளில் முன்னிலை வகித்த அன்னபூர்ணா அடுத்த 3 சுற்றுகளில் சற்று பின் தங்கினார். பின்னர் பங்காரு ஹனுமந்தாவை விட 9 ஆயிரத்து 645 வாக்குகள் அதிகமாக பெற்று, வெற்றி பெற்றார்.
கர்நாடக மாநிலத்தில் 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்றதால் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இதுகுறித்து துணை முதல்வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார், ''காங்கிரஸின் நல்லாட்சிக்கு மக்கள் இந்த வெற்றியை தந்துள்ளனர். முதல்வர் சித்தராமையாவின் ஊழலற்ற ஆட்சிக்கு மக்கள் நற்சான்றிதழ் அளித்துள்ளனர். எங்களது 5 உத்தரவாத திட்டங்களையும் வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதேவேளையில் பாஜக, மஜத கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, பசவராஜ் பொம்மை இருவரின் மகன்களையும் தோற்கடித்துள்ளனர். இந்த தேர்தலுக்காக அந்த கட்சியினர் ஏராளமான பணத்தை செலவு செய்த போதும் வெற்றிபெற முடியவில்லை'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT