Published : 24 Nov 2024 02:30 AM
Last Updated : 24 Nov 2024 02:30 AM

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியின் அமோக வெற்றி சாத்தியமானது எப்படி?

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு செயல்படுத்தப்பட்ட இலவச திட்டங்கள் உள்ளிட்ட 5 விஷயங்கள் அம்மாநிலத்தில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.

ஐந்து மாதங்களுக்கு முன் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 48 இடங்களில் 17-ல் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் ஹரியானா தேர்தலை தொடர்ந்து இப்போது மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி பெற்றிருப்பது இம்மாநிலங்களில் அக்கட்சி மீண்டும் எழுச்சி பெறுவதை காட்டுகிறது.

மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலுக்கு பிறகு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது பெண்களுக்கு வழங்கும் லஞ்சம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தபோதும், மாநிலம் முழுவதும் விழா நடத்தி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2.36 கோடி பெண்களுக்கு ஜுலை முதல் நவம்பர் வரையிலான தொகை (ரூ.7,500) வழங்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு இத்தொகை மாதந்தோறும் ரூ.2.100 ஆக உயர்த்தப்படும் உறுதி அளிக்கப்பட்டது. மேலும் ஏழை குடும்பங்களுக்கு இலவச காஸ் சிலிண்டர் உள்ளிட்ட திட்டங்கள் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர உதவியதாக கருதப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்திய மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் இத்தேர்தல் காலத்திலும் தொடர்ந்தது. என்றாலும் மராத்தா சமூகத்தினரின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கான வாக்குகளை சிவசேனா (ஷிண்டே), என்சிபி (அஜித் பவார்) அணிகள் பிரித்திருக்கலாம் எனவும் பாஜகவுக்கு அதன் பாரம்பரிய ஓபிசி வாக்காளர்கள் முழு ஆதரவு அளித்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

இந்து வாக்காளர்களை ஒன்றுதிரட்டும் 'பிரிந்தால் இழப்பு' என்ற உ.பி. முதல்வரின் முழக்கத்தை பாஜக பயன்படுத்தியது. இது முஸ்லிம் வாக்காளர்களை காங்கிரஸ் கூட்டணி வசம் திரும்பச் செய்யும் என கூட்டணிக் கட்சியான என்சிபி மட்டுமின்றி பாஜக தலைவர்கள் சிலரும்கூட ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் இந்த முழக்கத்திற்கு ஆர்எஸ்எஸ் ஒப்புதல் அளித்தது. மேலும் 'ஒன்றிணைந்தால் பாதுகாப்பு' என்ற பிரதமர் மோடியின் முழக்கமும் பிரச்சாரத்தில் எதிரொலித்தது.

மகாராஷ்டிர தேர்தல் வெற்றிக்கு, விதர்பா பிராந்தியத்தில் வெற்றி பெறுவது அவசியமாக கருதப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் இங்குள்ள 10 தொகுதிகளில் பாஜக 3-ல் மட்டுமே வெற்றி பெற்றபோதிலும் இம்முறை இப்பிராந்தியத்தில் வெற்றி வாய்ப்புக்கான அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டது.

இறுதியாக நன்கு கட்டமைக்கப்பட்ட பாஜகவின் தேர்தல் இயந்திரம் மகாராஷ்டிராவில் சிறப்பாக செயல்பட்டதாக கருதப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை விட பாஜக கூட்டணி தலைவர்கள் மாநில முழுவதும் அதிக கூட்டங்களில் பங்கேற்றனர். பிரதமர் மோடி 10 இடங்களிலும் அமைச்சர் அமித் ஷா 16 இடங்களிலும் பேசினர். இது, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற கூட்டங்களை விட அதிகமாகும்.

வாக்குப் பதிவு நாளில் வாக்கு செலுத்தாதவர்களை பிற்பகலில் அணுகி வாக்கு செலுத்த வைத்த பாஜக தொண்டர்களின் சேவை உள்ளிட்ட பிற செயல்பாடுகளும் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு உதவியதாக கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x