Published : 24 Nov 2024 02:03 AM
Last Updated : 24 Nov 2024 02:03 AM
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு தலைமை வகித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பட்னாவிஸை செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தேர்தல் வெற்றியின் காரணமாக அவரது செல்போன் நேற்று முழுவதும் ஒலித்து கொண்டே இருந்தது.
பட்னாவிஸின் தாயார் சரிதா நாக்பூரில் வசிக்கிறார். அவர் நேற்று காலை மகனை செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தாய் வாழ்த்தியதால் நெகிழ்ச்சி அடைந்த பட்னாவிஸ் செல்போனில் கூறும்போது, “அம்மா, உங்களின் ஆசியை பெற இன்று மாலை வருகிறேன். இங்குள்ள (மும்பை) அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு மாலைக்குள் வந்து விடுவேன். செல்போனில் ஆசி வழங்கியதற்காக நன்றி" என்று தெரிவித்தார். அம்மாவிடம் பட்னாவிஸ் செல்போனில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நான் நவீன அபிமன்யு: மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்தின்போது தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, “எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி என்னை சக்கர வியூகத்தில் சிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். நான் நவீன அபிமன்பு. சக்கர வியூகத்தை உடைக்கவும் தெரியும், அதில் இருந்து வெளியேறவும் தெரியும்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பட்னாவிஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நான் முன்பே கூறியிருக்கிறேன். நான் நவீன அபிமன்யு. மகாராஷ்டிர தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சக்கர வியூகத்தை உடைத்து, அதில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி உள்ளேன். பாஜகவின் தேர்தல் வெற்றியில் எனது பங்களிப்பு மிகவும் சிறியது. எங்கள் குழுவே வெற்றியை தேடித் தந்துள்ளது" என்று தெரிவித்தார்.
பட்னாவிஸின் தாய் சரிதா, நாக்பூரில் நிருபர்களிடம் கூறும்போது, “எனது மகன் தற்போது மகாராஷ்டிராவின் துணை முதல்வராக உள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக அவர் 24 மணி நேரமும் கடினமாக உழைத்தார். இந்த முறை மகாராஷ்டிராவின் முதல்வராக அவர் பதவி ஏற்பார். இதை உறுதியாக நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT