Published : 23 Nov 2024 05:06 PM
Last Updated : 23 Nov 2024 05:06 PM
புதுடெல்லி: ‘காலப்போக்கில் எனது இந்த வெற்றியை உண்மையில் உங்களின் வெற்றியாக உணரச் செய்வேன்’ என்று வயநாடு மக்களுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உறுதி அளித்துள்ளார்.
கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரனின் சாதனையை முறியடித்துள்ளார். பல எதிர்பார்ப்புகளை மீறி அவர் வயநாட்டில் 4,10,931 (4 லட்சத்து 10 ஆயிரத்து 931) வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எனது அன்புக்குரிய வயநாடு சகோதர, சகோதரிகளே! என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால் நான் நன்றியில் முழ்கித் திழைக்கிறேன்.
காலப்போக்கில் எனது இந்த வெற்றியை உண்மையில் உங்களின் வெற்றியாக நான் உணரச் செய்வேன். உங்களை பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்களின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்து கொண்டவர், உங்களில் ஒருவராக உங்களுக்காக போராடுகிறார் என்பதையும் உணரச் செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிப்பேன். இந்த மரியாதையை நீங்கள் எனக்கு அளித்ததற்கும், நீங்கள் எனக்கு அளித்த அளவு இல்லாத அன்புக்கும் நன்றி.
ஐக்கிய இடது முன்னணியில் உள்ள எனது சகாக்கள், கேரளா முழுவதும் உள்ள தலைவர்கள், தொண்டர்கள், தன்னார்வலர்கள், இந்த பிரச்சாரத்தில் நம்பமுடியாத அளவுக்கு உழைத்த எனது அலுவலக சகாக்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி. நாளென்றுக்கு 12 மணி நேர (உணவு தூக்கம் இல்லாமல்) கார் பயணம் என்ற எனது அழுத்தத்தை, நாம் நம்பும் ஒரு சித்தாந்ததுக்காக உண்மையான வீரர்களைப் போல போராடியதற்காகவும் நன்றி.
எனது தாய், ராபர்ட் மற்றும் எனது இரண்டு தங்கங்கள் ரைஹான் மற்றும் மிராயா; நீங்கள் எனக்கு அளித்த தைரியம் மற்றும் அன்புக்கு எந்த நன்றியும் போதாது. மேலும் எனது சகோதரன் ராகுல்... இவர்கள் எல்லோரையும் விட நீ துணிச்சலானவன். எனக்கு ஒரு பாதையைக் காட்டியதற்காகவும், எப்போதும் எனது பலமாக இருப்பதற்கும் நன்றி" என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வயது மூப்பு காரணமாக தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சோனியா காந்தி, காங்கிரஸ் கோட்டையான ரேபரேலி தொகுதியை விட்டுக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி அங்கு போட்டியிடலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில் 2024 மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு தனது வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலைச் சந்தித்த வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியை நிறுத்தும் முடிவினை காங்கிரஸ் எடுத்தது. தொடர்ந்து வயநாட்டில் போட்டியிட்டு பிரியங்கா தனது தேர்தல் அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT