Published : 23 Nov 2024 01:30 PM
Last Updated : 23 Nov 2024 01:30 PM

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? - ஏக்நாத் ஷிண்டே விளக்கம்

தேர்தல் முடிவுகளை அடுத்து தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக வெற்றிச் சின்னத்தைக் காட்டிய ஏக்நாத் ஷிண்டே

மும்பை: மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து 3 கட்சிகளின் தலைவர்களும் அமர்ந்து பேசி முடிவெடுப்போம் என்று முதல்வரும் சிவ சேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக, சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 222 தொகுதிகளில் வெற்றி முகத்தில் இருக்கிறது. இதில், பாஜக 126 தொகுதிகளிலும், சிவ சேனா 55 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) 39 தொகுதிகளிலும் வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றன. இதன்மூலம் அக்கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவெடுத்துள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகாயுதி கூட்டணி வெற்றி முகத்தில் இருப்பதை அடுத்து தானே நகரில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு இனிப்பு வழங்கி அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “இது மிகப்பெரிய வெற்றி. மகாராஷ்டிரா வாக்காளர்களுக்கு எனது நன்றி. மகாயுதி அமோக வெற்றி பெறும் என்று கூறியிருந்தேன். விவசாயிகள், மூத்த குடிமக்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2.5 வருடங்களில் மகாயுதி செய்த பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் இது.” என தெரிவித்தார்.

மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஏக்நாத் ஷிண்டே, “இறுதி முடிவுகள் வரட்டும். அதன் பிறகு, நாங்கள் ஒன்றாக தேர்தலில் போட்டியிட்டது போல், மூன்று கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து (யார் முதல்வர் என்பது குறித்து) முடிவெடுப்போம்.” என தெரிவித்தார். இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

நாக்பூரில் போட்டியிட்ட துணை முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் வெற்றி முகத்தில் இருக்கிறார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது தாயார் சரிதா ஃபட்னாவிஸ், “நிச்சயமாக தேவேந்திர பட்னவிஸ்தான் முதல்வராக வருவார். மாநிலத்தின் மிகப் பெரிய தலைவராக உருவெடுத்திருப்பதால் இந்த நாள் எனது மகனுக்கு பெரிய நாள். அவர் 24 மணி நேரமும் கடுமையாக உழைத்தார்.” எனக் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x