Published : 23 Nov 2024 12:20 PM
Last Updated : 23 Nov 2024 12:20 PM

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றி முகம்: தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

மும்பையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்துக்கு முன்பாக பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிவ சேனா தொண்டர்கள்

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு ஏற்ப 223 தொகுதிகளில் வெற்றி முகத்தில் இருப்பதால் அக்கட்சிகளின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்ட அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

நண்பகல் 12 மணி நிலவரப்படி ஆளும் மகாயுதி கூட்டணி 223 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி 54 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றி தேவை எனும் நிலையில், மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான சூழல் ஏற்பட்டு வருவதால் அக்கூட்டணியில் உள்ள கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மகாயுதி கூட்டணியில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 148 தொகுதிகளில் போட்டியிட்டது. அக்கட்சி 127 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 80 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சி 56 தொகுதிகளிலும், 53 தொகுதிகளில் போட்டியிட்ட துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 38 தொகுதிகளிலும் வெற்றி முகத்தில் உள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 103 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா 89 தொகுதிகளிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 87 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், சிவ சேனா (யுபிடி) 18 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) 15 தொகுதிகளிலும் வெற்றி முகத்தில் உள்ளன.

மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான சூழல் உருவெடுத்துள்ளதை அடுத்து சிவ சேனா தொண்டர்கள் மும்பையில் உள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் வீட்டின் முன்பாக பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கோத்ருட் தொகுதியில் முன்னிலை வகித்து வருவதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே, “மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உள்ளது. இன்னும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில், ஜார்க்கண்டில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அங்கு மீண்டும் அரசாங்கத்தை உருவாக்கப் போகிறோம். மகாராஷ்டிரா தேர்தல் ஏமாற்றம் அளித்துள்ளது. மகாராஷ்டிராவில், எங்கள் பிரச்சாரம் நன்றாக இருந்தது, ஆனால் பொதுமக்கள் எங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கலாம், அவர்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றுவோம்.” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x