Published : 23 Nov 2024 12:09 PM
Last Updated : 23 Nov 2024 12:09 PM
புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் பாஜக நான்கிலும், சமாஜ்வாதி கட்சி இரண்டு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. பிஹாரில் இரண்டு தொகுதிகளில் ஆளும் என்டிஏ கூட்டணி முன்னிலையில் உள்ளன. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
நாடு முழுவதும் 14 மாநிலங்களை சேர்ந்த 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்குவங்கத்தில் 6, அசாமில் 5, பிஹார், பஞ்சாபில் தலா 4, கர்நாடகாவில் 3, கேரளா, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2 தொகுதிகள், குஜராத், உத்தராகண்ட், மேகாலயா, சத்தீஸ்கரில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மே.வங்கத்தில் திரிணமூல் முன்னிலை: மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடந்த 6 பேரவைத் தொகுதிகளில் மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அசாத்திய முன்னிலை பெற்றுள்ளனர். ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி சம்பவம், அதனைத் தொடர்ந்த மருத்துவர்களின் போராட்டம் பொதுமக்களின் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ள நிலையில் இந்த முன்னிலை பெரும் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.
இடைத்தேர்தல் நடந்த ஆறு தொகுதிதளில் ஐந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான தெற்கு வங்கத்தில் அமைந்துள்ளது. மதரிஹாட் மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 2021ம் ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உ.பி.யில் பாஜக 4-ல் முன்னிலை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 எம்எல்ஏக்கள் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர்களின் சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாகின. அதேபோல் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்ஃபான் சோலங்கி குற்றவழக்கில் தண்டனை பெற்றதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதனால் அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஒன்பது தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு வருகிறது. இதில் நான்கு தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இரண்டு தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி முன்னிலையில் இருக்கிறது.
பிஹாரில் ஆளும் என்டிஏ முன்னிலை: பிஹாரில் இடைத்தேர்தல் நடந்த நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் தராரி மற்றும் பெலகஞ்ச் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஆளும் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆர்ஜேடி இமாம்கஞ்ச் தொகுதியிலும், பகுஜன் சமாஜ்வாதி கட்சி ராம்கர் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
பாலக்காட்டில் யுடிஎஃப் மீண்டும் முன்னிலை: பாலக்காட்டில் நடந்த இடைத்தேர்தலில், யுடிஎஃப் வேட்பாளர் ராகுல் மம்கூததில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். ஏழு சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், ராகுல் 1,388 வாக்குள் அதிகம் பெற்றுள்ளார். வாக்குகள் எண்ணப்பட்ட பகுதிகள் அனைத்தும் பாலக்காடு நகராட்சியில் உள்ள பாஜக ஆளும் பகுதிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அசாமில் என்டிஏ கூட்டணி முன்னிலை: அசாம் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடந்த ஐந்து பேரவைத் தொகுதிகளில் நான்கு தொகுகளில் ஆளும் என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி 3, காங்., 1: பஞ்சாப் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நான்கு தொகுதிகளில் சப்பேவால், கிதர்பாவா மற்றும் தேரா பாபா நானாக் ஆகிய மூன்று தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், பர்னாலாவில் காங்கிஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன.
தலைகீழாக மாறிய கர்நாடகா நிலை: கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடந்த ஷிக்கான் தொகுதியில் 8 சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பின்பு நிலைமை தலைகீழாக மாறியது. முதல் 7 சுற்று வாக்கு எண்ணிக்கை வரை முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளர் பாரத் பொம்மையை 8வது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பின்பு காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான் பதான் பின்னுக்கு தள்ளினார். 8வது சுற்று முடிவில் பதான் 1,158 வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.
வயநாட்டில் பிரியங்கா முன்னிலை: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT