Published : 23 Nov 2024 09:03 AM
Last Updated : 23 Nov 2024 09:03 AM

தேர்தல் முடிவுகள் 2024: மகாராஷ்டிராவில் பாஜக+ அமோக வெற்றி, ஜார்க்கண்டை தக்கவைத்தது இண்டியா!

புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி அணி கூட்டணி 225+ தொகுதிகளை வசப்படுத்தி அமோக வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அதேநேரத்தில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 55+ தொகுதிகளை வசப்படுத்தி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

மகாராஷ்டிரா வெற்றி / முன்னிலை நிலவரம்:
பாஜக மகாயுதி அணி - 230
காங். மகாவிகாஸ் அகாடி - 53
(மொத்த இடங்கள் - 288 / பெரும்பான்மைக்கு - 145)

மகாயுதி vs மகா விகாஸ் அகாடி: மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்ட அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. தற்போதைய நிலவரபட்டி 288 தொகுதிகளில் 230-ஐ மகாயுதி கூட்டணியும், 53-ஐ மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் வசப்படுத்துகின்றன.

கூட்டணிகளின் பிரேக் அப் - மகாயுதி கூட்டணியில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 148 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 132 தொகுதிகளையும், 80 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சி 53 தொகுதிகளையும், 53 தொகுதிகளில் போட்டியிட்ட துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 40 தொகுதிகளையும் வசப்படுத்துகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 103 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா 89 தொகுதிகளிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 87 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் 18 தொகுதிகளையும், சிவ சேனா (யுபிடி) 21 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) 11 தொகுதிகளையும் வசப்படுத்துகின்றன.

ஜார்க்கண்ட் வெற்றி / முன்னிலை நிலவரம்:
ஜெஎம்எம் + காங். அணி - 57
பாஜக கூட்டணி - 23
மொத்த இடங்கள் - 81 / பெரும்பான்மைக்கு 41)

ஜெஎம்எம் + காங்கிரஸ் vs பாஜக கூட்டணி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஆளும் ஜெஎம்எம் தலைமையிலான கூட்டணி 57 இடங்களையும், பாஜக கூட்டணி 23 இடங்களையும் வசப்படுத்துகின்றன.

இண்டியா கூட்டணியில் ஹேமந்த் சோரனின் ஜெஎம்எம் 35 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ஆர்ஜேடி 4 இடங்களையும் கைப்பற்றுகின்றன. 2019 தேர்தலில் 25 இடங்களைக் கைப்பற்றிய பாஜக இம்முறை 20 இடங்களை மட்டுமே வசப்படுத்துகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x