Published : 23 Nov 2024 09:03 AM
Last Updated : 23 Nov 2024 09:03 AM
புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவ.23) காலை 8 மணி தொடங்கி எண்ணப்பட்டு வகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் அமோக வெற்றியை நோக்கி பாஜக முன்னேறி வருகிறது. ஜார்க்கண்டில் ஆரம்பத்தில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் பாஜகவுக்கு சாதகமாக இருந்த நிலையில் தற்போது ஜெஎம்எம் கூட்டணி திடீரென வேகமெடுத்து வெற்றி முகத்தில் செல்கிறது.
மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்:
பாஜக மகாயுதி அணி - 223
காங். மகாவிகாஸ் அகாடி - 55
(மொத்த இடங்கள் - 288 / பெரும்பான்மைக்கு - 145)
மகாயுதி கூட்டணியில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 148 தொகுதிகளில் போட்டியிட்டது. அக்கட்சி 127 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 80 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சி 56 தொகுதிகளிலும், 53 தொகுதிகளில் போட்டியிட்ட துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 38 தொகுதிகளிலும் வெற்றி முகத்தில் உள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 103 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா 89 தொகுதிகளிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 87 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், சிவ சேனா (யுபிடி) 18 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) 15 தொகுதிகளிலும் வெற்றி முகத்தில் உள்ளன.
ஜார்க்கண்ட் முன்னிலை நிலவரம்:
ஜெஎம்எம் + காங். அணி - 50
பாஜக கூட்டணி - 30
மொத்த இடங்கள் - 81 / பெரும்பான்மைக்கு 41)
மகாயுதி vs மகா விகாஸ் அகாடி: மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்ட அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தற்போதைய நிலவரபட்டி 288 தொகுதிகளில் 223-ல் மகாயுதி கூட்டணியும், 55-ல் மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன.
ஜெஎம்எம் + காங்கிரஸ் vs பாஜக கூட்டணி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஆளும் ஜெஎம்எம் தலைமையிலான கூட்டணி 50 இடங்களிலும், பாஜக கூட்டணி 30 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT