Published : 23 Nov 2024 09:03 AM
Last Updated : 23 Nov 2024 09:03 AM
புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி அணி கூட்டணி 235+ தொகுதிகளை வசப்படுத்தி அமோக வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அதேநேரத்தில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 55+ தொகுதிகளை வசப்படுத்தி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
மகாராஷ்டிரா வெற்றி / முன்னிலை நிலவரம்:
பாஜக மகாயுதி அணி - 236
காங். மகாவிகாஸ் அகாடி - 48
(மொத்த இடங்கள் - 288 / பெரும்பான்மைக்கு - 145)
மகாயுதி vs மகா விகாஸ் அகாடி: மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்ட அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இரவு 8 மணி நிலவரப்படி, 288 தொகுதிகளில் 236-ஐ மகாயுதி கூட்டணியும், 48-ஐ மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் வசப்படுத்துகின்றன.
கூட்டணிகளின் பிரேக் அப் - மகாயுதி கூட்டணியில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 148 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 133 தொகுதிகளையும், 80 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சி 57 தொகுதிகளையும், 53 தொகுதிகளில் போட்டியிட்ட துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளையும் வசப்படுத்துகின்றன.
காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 103 தொகுதிகளிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா 89 தொகுதிகளிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 87 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில், காங்கிரஸ் 15 தொகுதிகளையும், சிவ சேனா (யுபிடி) 20 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) 10 தொகுதிகளையும் வசப்படுத்துகின்றன.
ஜார்க்கண்ட் வெற்றி / முன்னிலை நிலவரம்:
ஜெஎம்எம் + காங். அணி - 56
பாஜக கூட்டணி - 24
மொத்த இடங்கள் - 81 / பெரும்பான்மைக்கு 41)
ஜெஎம்எம் + காங்கிரஸ் vs பாஜக கூட்டணி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இரவு 8 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஆளும் ஜெஎம்எம் தலைமையிலான கூட்டணி 56 இடங்களையும், பாஜக கூட்டணி 24 இடங்களையும் வசப்படுத்துகின்றன.
இண்டியா கூட்டணியில் ஹேமந்த் சோரனின் ஜெஎம்எம் 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ஆர்ஜேடி 4 இடங்களையும் கைப்பற்றுகின்றன. 2019 தேர்தலில் 25 இடங்களைக் கைப்பற்றிய பாஜக இம்முறை 21 இடங்களை மட்டுமே வசப்படுத்துகிறது.
மகாராஷ்டிராவில் யார் முதல்வர்? - மகாராஷ்டிராவில் 130-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக வசப்படுத்தியுள்ள நிலையில், அங்கு யார் முதல்வர் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து 3 கட்சிகளின் தலைவர்களும் அமர்ந்து பேசி முடிவெடுப்போம் என்று அம்மாநில முதல்வரும், சிவ சேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். அதேபோல், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து மகாயுதி கூட்டணியில் உள்ள தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும், அதில் எவ்வித சர்ச்சையும் இல்லை என்றும் அம்மாநில துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டு: மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் மக்களின் ஆணையை பிரதிபலிக்கவில்லை; இதில் ஏதோ பெரிய சதி இருக்கிறது என்று உத்தவ் தாக்கரேவின் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேலும், “எங்கள் தொகுதிகளில் சிலவற்றை திருடிவிட்டார்கள். இது பொதுமக்களின் முடிவாக இருக்க முடியாது. பொதுமக்களும் கூட இந்த முடிவுகளை ஏற்கவில்லை. இந்த மாநில மக்கள் நேர்மையற்றவர்கள் அல்ல. மகாராஷ்டிர மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்று ஆவேசமாக அவர் கூறினார்.
ஹேம்ந்த் சோரன் உத்வேக பேட்டி: ஜார்க்கண்ட் தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன் கூறும்போது, “நான் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக என் மீது பொய் வழக்கு, ஊழல் வழக்குகளை தொடர்ந்து என்னை செயல்பட விடாமல் தடுத்தனர். ஆனால் இன்று உண்மைக்கு வெற்றி கிடைத்துள்ளது. நாங்கள் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களால் எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வங்கதேச மக்களை ஊடுருவச் செய்கிறோம் என்று பொய்யான பல கதைகளை பாஜக தலைவர்கள் கூறினர். பழங்குடியின மக்களின் வாக்குகளை சிதறடிக்க இதுதான் சரியான வழி என்று நினைத்தார்கள். ஆனால், அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை.
இந்தத் தேர்தலில் அதிக அளவுக்கு அழுத்தம் இருந்தது. அது எவ்வளவு என்று என்னால் சொல்ல முடியாது. இதுதொடர்பாக நான் பேசினால், உள்ளுக்குள் ரத்தம் பெருக்கெடுத்து ஓடும். அது மிகவும் கடினம். ஆனால், இதுபோன்ற கடினமான தேர்தலை மீண்டும் சந்திக்க முடியாது என்று மட்டும் என்னால் நிச்சயம் கூற முடியும்” என்று ஹேமந்த் சோரன் கூறினார்.
இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகள் ஆதிக்கம்: நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளில் அந்தந்த ஆளுங்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. மேற்கு வங்கத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸும், கர்நாடகாவில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சரத்பவார் கட்சிக்கு மோசமான தோல்வி: மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்து உள்ளது. கடந்த 2019 தேர்தலில் 54 இடங்களில் வென்ற சரத் பவார் கட்சி, தற்போது 12 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இது மகாராஷ்டிர அரசியலில் சரத் பவாருக்கு மிகப் பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பெரும்பாலான தலைவர்கள், எம்எல்ஏக்களை அஜித் பவார் கைப்பற்றியுள்ளதால் இந்த நிலை சரத் பவாருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கருத்து: மகாராஷ்டிராவில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் சிறந்த நிர்வாகத்தால் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்ற ஆளும் ஜேஎம்எம் கூட்டணிக்கும் வாழ்த்துக்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி சொல்வது என்ன? - இண்டியா கூட்டணிக்கு மிகப் பெரிய ஆணையை அளித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு மனமார்ந்த நன்றி என்று ஜார்க்கண்ட் வெற்றி குறித்து காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில், மகாராஷ்டிர முடிவுகள் எதிராபாராதது என்றும், அதுகுறித்து ஆராய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், “வயநாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் பிரியங்கா காந்தி மீது வைத்துள்ள நம்பிக்கையால் பெருமையடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி சாதனை வெற்றி: வயநாடு மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி களம் இறக்கப்பட்டார். இங்கு பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மொகேரி 2,22,407 வாக்குகள் பெற்றார். இவரை 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி தோற்கடித்தார். இங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகள் பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT