Published : 23 Nov 2024 05:06 AM
Last Updated : 23 Nov 2024 05:06 AM

அதானி வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் சுட்டிக்காட்டிய மாநிலங்களில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள்தான் ஆட்சி: பாஜக

புதுடெல்லி: தமிழகம், ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெற அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்தது.

இதை மறைத்து அமெரிக்க நிறுவனங்களிடம் அதானி குழுமம் முதலீடுகளை பெற்றது என்று குற்றம் சாட்டி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அதானி குழும தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா டெல்லியில் நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மாநில மின் விநியோக நிறுவனங்கள், 2 தனியார் நிறுவனங்கள்,4 மாநிலங்கள் தொடர்பானவை ஆகும். கடந்த 2021 ஜூலை முதல் 2022 பிப்ரவரி வரை பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன.

அதாவது சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஒடிசாவில் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள ஆட்சியில் பணப் பரிமாற்றங்கள் நடைபெற்று உள்ளன.

அமெரிக்க நீதிமன்றம் சுட்டிக் காட்டிய இந்த 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறவில்லை. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆட்சியில் இருந்தன. இந்த பணம் பிரதமர் மோடியின் பாக்கெட்டுக்கு எப்படி செல்லும்? சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள் மற்றும் மாநில மின் விநியோக நிறுவனங்களுக்கே பணம் சென்றிருக்கிறது. இதுகுறித்து ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும்.

ரூ.100 கோடி நன்கொடை: தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி, அதானி அறக்கட்டளையிடம் இருந்து ரூ.100 கோடி நன்கொடை பெற்றுள்ளார். அதானியை ஊழல்வாதி என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அவரிடம் இருந்து காங்கிரஸ் முதல்வர் நன்கொடை பெற்றது ஏன்? அதானி குழுமத்துடன் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ரூ.12,400 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளார். அதானியுடன் அவர் ஒப்பந்தம் செய்தது ஏன்? இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

ஆந்திர அதிகாரிகளுக்கு ரூ.1,750 கோடி லஞ்சம்: அதானி குழுமம் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் 54 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில் அதானி குழும தலைவர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதில் 7 பேர் இந்தியர்கள் ஆவர். மற்றொருவர் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் குடியுரிமையை பெற்றவர்.

அதானி குழுமம் சார்பில் ஆந்திர அதிகாரிகளுக்கு ரூ.1,750 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை, கவுதம் அதானி 3 முறை ரகசியமாக சந்தித்து பேசி உள்ளார். லஞ்ச பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களில் கவுதம் அதானியின் பெயர் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. எனினும் பிக் மேன் (பெரிய மனிதர்) என்ற ரகசிய வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x