Published : 22 Nov 2024 06:27 PM
Last Updated : 22 Nov 2024 06:27 PM

“கேஜ்ரிவாலைவிட அதிஷி ஆயிரம் மடங்கு சிறந்தவர்” - டெல்லி துணைநிலை ஆளுநர் பாராட்டு

முதல்வர் அதிஷி மற்றும் துணைநிலை ஆளுநர் சக்சேனா | கோப்புப் படம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அதிஷி, அவருக்கு முன்பு இருந்த முதல்வரைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சிறந்தவர் என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பாராட்டு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இந்திரா காந்தி பெண்கள் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, முதல்வர் அதிஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பேசிய வி.கே.சக்சேனா, "டெல்லியின் முதல்வராக ஒரு பெண் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமல்ல, அவர் தனக்கு முன்பு இருந்த முதல்வரைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

பெண்களின் முன்னேற்றத்துக்கு நான்கு வழிகாட்டும் நட்சத்திரங்கள் உள்ளன. முதலில் உங்களுக்கான பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். இரண்டாவது, உங்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கான பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். மூன்றாவது, சமூகம் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டும். நான்காவதாக, பாலினம் என்ற கண்ணாடி உச்சவரம்பை உடைத்து, அனைத்துத் துறைகளிலும் மற்றவர்களுக்கு இணையாக நிற்கும் பெண்களாக உங்களை நீங்கள் நிரூபிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

டெல்லியின் முதல்வராக கேஜ்ரிவால் இருந்தபோது, அவருக்கும் டெல்லி ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட கேஜ்ரிவால் கடந்த செப்டம்பரில் ஜாமினில் வெளியே வந்ததை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பை பெற்றே மீண்டும் முதல்வர் பதவியில் அமரப் போவதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, அதிஷி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x