Published : 22 Nov 2024 05:53 PM
Last Updated : 22 Nov 2024 05:53 PM

டெல்லி காற்று மாசு: கட்டுப்பாடுகளை கண்காணிக்க குழு அமைத்தது உச்ச நீதிமன்றம்

இடம்: டெல்லி | படம்: சஷி சேகர் காஷ்யப்

புதுடெல்லி: டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முழுமையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு, "டெல்லிக்குள் லாரிகள் நுழைவதற்குத் தடை, கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு முழுத் தடை உள்ளிட்ட கடுமையான மாசுக் கட்டுப்பாடுகள், டெல்லி மற்றும் என்சிஆரில் தொடரும். GRAP (கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்‌ஷன் பிளான்) IV நடவடிக்கைகள் தொடர்வது குறித்த கேள்வியை திங்களன்று நாங்கள் பரிசீலிப்போம். இது தொடர்பாக நவம்பர் 18 அன்று உச்ச நீதிமன்றம் விதித்த தடையை அமல்படுத்துவது திருப்திகரமானதாக இல்லை. எனவே, டெல்லியின் நுழைவு இடங்களில் நீதிமன்ற தடையை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய 13 வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஆணையர்களாக நியமிக்கப்படுகிறார்கள்" என உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, டெல்லியில் மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்பை நேரில் வெளிப்படுத்தும் நோக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி இண்டியா கேட் பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "வட இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது ஒரு தேசிய அவசரநிலையாக மாறி உள்ளது. நமது குழந்தைகளின் எதிர்காலத்தைத் திருடக்கூடியதாகவும், முதியவர்களை மூச்சுத் திணறடிக்கக் கூடியதாகவும் பொது சுகாதார நெருக்கடி மாறி உள்ளது. இது எண்ணற்ற உயிர்களை அழித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்துக்கும் பேரழிழை ஏற்படுத்துகிறது.

ஏழைகள் தங்களைச் சுற்றியுள்ள நச்சுக் காற்றிலிருந்து தப்பிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். சுத்தமான காற்றுக்காக குடும்பங்கள் மூச்சுத் திணறுகின்றன. குழந்தைகள் நோய்வாய்ப்படுகிறார்கள். லட்சக்கணக்கான உயிர்கள் பறிக்கப்படுகின்றன. சுற்றுலா வீழ்ச்சியடைந்து, நமது உலகளாவிய நற்பெயர் சிதைந்து வருகிறது. மாசு மேகம் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு உள்ளது. அதை சுத்தம் செய்ய அரசாங்கங்கள், நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் குடிமக்களின் பங்களிப்புடன் பெரிய மாற்றங்கள் மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் தேவை. இந்தப் பிரச்சினையில் மக்களுக்கு ஒரு கூட்டு தேசிய பதில் தேவையே தவிர, அரசியல் பழி விளையாட்டுகள் அல்ல.

இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் கூடும் என்பதால், எம்.பி.க்கள் அனைவருக்கும் கண் எரிச்சல் மற்றும் தொண்டை வலி நினைவுக்கு வரும். இந்த நெருக்கடியை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்பது குறித்து ஒன்று கூடி விவாதிப்பது நமது பொறுப்பு" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கட்டுப்பாடுகள்: டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இந்தக் கட்டுப்பாடுகள் கடந்த 16-ம் தேதி காலை 8 மணி முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, டெல்லியில் புதிய கட்டிடங்களை கட்டுவதற்கும், பழைய கட்டிடங்களை இடிப்பறத்கும் தடை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில், மிக முக்கிய அரசு கட்டுமானப் பணிகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோலில் இயங்கும் BS-III (Bharat Stage-III) 4 சக்கர வாகனங்கள், டீசலில் இயங்கும் BS-IV 4 சக்கர வாகனங்களை தேசிய தலைநகர் பிராந்தியம் (National Capital Region-NCR) மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் இயக்க தடை விதிக்கப்பட்டது.

வெளியில் இருந்து வரும் BS-III வகை 4 சக்கர வாகனங்களில் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்களைத் தவிர பிற வாகனங்களை டெல்லிக்கு உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்றும் காற்றத் தர மேலாண்மை ஆணையம் டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியது. டெல்லியில் மட்டுமல்லாது, அதை ஒட்டிய என்சிஆர் மாவட்டங்களான குருகிராம், ஃபரிதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத் நகர் ஆகிய இடங்களிலும் மாசுபடுத்தும் இத்தகைய நான்கு சக்கர வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது.

எலக்ட்ரிக், சிஎன்ஜி மற்றும் டீசலில் இயங்கும் பிஎஸ்-6 வகை வாகனங்கள் தவிர அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளும் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. மேலும், ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கான பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை நிறுத்துவது மற்றும் ஆன்லைன் கற்பித்தல் முறைக்கு மாறுவது குறித்து டெல்லி மற்றும் பிற மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்றும் காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. காற்று மாசை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள இந்த தடைகளை நீதிமன்ற அனுமதி இல்லாமல் தளர்த்தக் கூடாது என்று கடந்த 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x