Published : 22 Nov 2024 04:49 PM
Last Updated : 22 Nov 2024 04:49 PM
புதுடெல்லி: இந்தியாவில் 'சோசலிசம்' என்ற கருத்து அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் ஒரு பொதுநல அரசைக் குறிக்கிறது. குடிமக்கள் மீது திணிக்கப்படும் சர்வாதிகாரக் கோட்பாடு அல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார்.
1976-ம் ஆண்டு அரசியலமைப்பின் முகப்புரையில் 'சோசலிஸ்ட், மதச்சார்பின்மை' என்ற வார்த்தைகள் பின்னோக்கிய விண்ணப்பத்துடன் சேர்க்கப்பட்டதை எதிர்த்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு இதனை விசாரித்து வருகிறது.
1976-ம் ஆண்டு அரசியலமைப்பு 42-வது திருத்தச் சட்டத்தின் பிரிவு 2-ன் கீழ் அரசியலமைப்பின் முகப்புரையில் சோசலிஸ்ட், மதச்சார்பின்மை என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி மனுதாரர்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மனுதாரர்களில் ஒருவர், சோசலிச கோட்பாடு மற்ற கோட்பாடுகளைவிட மேலானது கிடையாது என்றும், பொருளாதார வளர்ச்சியை அடைய ஒரு குறிப்பிட்ட பொருளாதார கோட்பாட்டை தேசத்தின் மீது திணிப்பது தவறு என்றும் வாதிட்டார்.
மற்றொரு மனுதாரரான வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய், “அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையானது நவம்பர் 26, 1949 அன்று அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை குறிக்கிறது. இது மாற்ற முடியாத உண்மை என்பதால் அதை மாற்ற முடியாது. முன்னுரையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்டது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி. மக்களின் குரல் மௌனமாக்கப்பட்ட அவசரநிலை காலகட்டத்தில் 42-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மேற்கொள்ளப்பட்டது" என்று சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதில் அளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா, "இங்கே சோசலிசம் என்பது அனைவருக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டிய பொதுநல அரசு என்று பொருள். தனியார் துறை இங்கு வளர்ச்சியடைவதை அது ஒருபோதும் தடுக்கவில்லை. நாம் அனைவரும் தனியார் துறையால் பலனடைந்துள்ளோம். சோசலிசம் பற்றிய எண்ணம் அரசியலமைப்பின் பல பிரிவுகளில் இயங்குகிறது. சோசலிசமும் மதச்சார்பின்மையும் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி.
பிரிவு 368 (அரசியலமைப்பைத் திருத்துவதற்கான அதிகாரம்) முன்னுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். இது அரசியலமைப்புக்கு புறம்பானது அல்லது வேறுபட்டது அல்ல” என்று குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு தீர்ப்புக்காக திங்கள்கிழமைக்கு (நவ.25) ஒத்திவைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT