Published : 22 Nov 2024 05:06 PM
Last Updated : 22 Nov 2024 05:06 PM

வட இந்திய காற்று மாசு பிரச்சினை ‘தேசிய அவசரநிலை’ - கூட்டு முயற்சிக்கு ராகுல் காந்தி அழைப்பு

இடம்: டெல்லி | படம்: சுஷில் குமார் வர்மா

புதுடெல்லி: ‘வட இந்தியாவில் நிலவும் காற்று மாசு பிரச்சினை என்பது ஒரு தேசிய அவசரநிலை. அதற்கு அரசியல் பழிகூறல் விளையாட்டை விட அனைவரின் கூட்டு முயற்சி தேவை’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் சூழலியளார் விமலேந்து ஜாவுடனான தான் உரையாடல் வீடியோவையும் இணைத்துள்ளார். ராகுல் தனது பதிவில், “வட இந்தியாவில் நிலவி வரும் காற்று மாசு பிரச்சினை என்பது ஒரு தேசிய அவசரநிலை. நமது குழந்தைகளின் எதிர்காலத்தைத் திருடி, முதியவர்களை மூச்சுத் திணரவைக்கும் பொதுப் பிரச்சினை. எண்ணற்ற உயிர்களை பழாக்கும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பேரழிவு.

நம்மில் உள்ள ஏழைகள் தங்களைச் சுற்றியுள்ள நச்சுக் காற்றிலிருந்து தப்பிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். சுத்தமான காற்றுக்காக குடும்பங்கள் தவிக்கின்றன. குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு வீழ்கிறார்கள், லட்சக்கணகானவர்களின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. நமது சுற்றுலா வீழ்ச்சியடைந்து சர்வதேச அளவில் நமது நற்பெயர் சிதைந்து வருகிறது.

காற்று மாசுபாடு வெகுவாக பரவியிருக்கிறது. இதை சரிசெய்வதற்கு பெரிய மாற்றங்களும், அரசு, நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து தீர்க்கமான நடவடிக்கைகள் வேண்டும். நமக்குத் தேவை ஒரு கூட்டு முயற்சி தானே தவிர, அரசியல் பழிகூறல் விளையாட்டு இல்லை. இன்னும் சில தினங்களில் நாடாளுமன்றம் கூட இருக்கிறது என்பதால் நம் அனைவருக்கும் நமது கண்ணெரிச்சலும், தொண்டை வலியும்தான் நினைவுக்கு வரும். இந்தியா எவ்வாறு இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதை ஒன்று கூடி விவாதிப்பது நமது பொறுப்பு” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வட இந்தியாவில் பல நகரங்கள், குறிப்பாக டெல்லியும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களான நொய்டா, காசியாபாத், குருகிராம், ஃப்ரிதாபாத் கடந்த சில வாரங்களாக கடுமையான காற்று மாசு பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. டெல்லியில் காற்றின் தரம் கடந்த நவம்பர் 16-ம் தேதி கடுமையாக மாறியது. அது புதன்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்களாக கடுமையான நிலையிலேயே இருந்தது. முன்னதாக, கடந்த 2017 நவம்பர் மற்றும் 2016 நவம்பரில் காற்றின் தரம் தொடர்ந்து அதிகபட்சம் 7 நாட்கள் மிக மோசமானதாக இருந்தது. தற்போது டெல்லியில் காற்றின் தரம் கடுமையான நிலையை அடைந்தால், நகரில் ‘கிராப்’ 4-ன் கீழ் கடுமையான நடவடிக்கைகள் அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x