Published : 22 Nov 2024 02:18 PM
Last Updated : 22 Nov 2024 02:18 PM
புதுடெல்லி: இந்திய சூரிய ஒளி மின்சார நிறுவனத்தின் (Solar Energy Corporation of India) ஒப்பந்தத்தில் கையெழுத்திட அப்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு லஞ்சம் கொடுக்க அதானி உறுதி அளித்தகாக அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஜெகனைச் சந்தித்த அதானி இந்த உறுதியினை அளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தது.
அந்த வரிசையில், பெயர் குறிப்பிடப்படாத வெளிநாட்டு அதிகாரி ஒருவர் ஆந்திர அரசு அதிகாரிக்கு ரூ.1750 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்புக்கு பின்பே அப்போதைய ஆந்திர அரசு இந்திய சூரிய மின்சார நிறுவனத்திடம் இருந்து 7 ஜிகாவாட் மின்சாரம் வாங்க ஒப்புக்கொண்டது என்றும் இது வேறு எந்த மாநிலமும் வாங்காத அதிக அளவாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
குற்றச்சாட்டும், மறுப்பும்: “இந்திய சூரிய மின்சார நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு குறிப்பிட்ட விலையில் 12 ஜிகாவாட் சூரிய மின்சாரம் வழங்க அதானி குழுமம் மற்றும் அஸூர் பவருக்கு ஒப்பந்தம் வழங்கியது.என்றாலும் அதிக விலை காரணமாக எஸ்இசிஐ-யிடமிருந்து சூரிய மின்சாரத்தை யாரும் வாங்க முன்வரவில்லை.இதனைத் தொடர்ந்து அதானி மற்றும் அஸூர் மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் சதிச் செயலில் ஈடுபட்டனர். கடந்த 2021 - 23 காலகட்டத்தில் அதானி குழுமம் மாநில மின்விநியோக நிறுவனங்களுக்கு ரூ.2100 கோடி (265 மல்லியன் அமெரிக்க டாலர்) லஞ்சம் கொடுத்தது. ஆந்திரா தவிர தமிழகம், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திட முயன்றன.” என்று அமெரிக்க ஆணையம் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் ஆதாரமற்றது என்றும் இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
ஜெகன் கட்சியின் எதிர்வினையும், தெலுங்கு தேச கட்சியின் மவுனமும்: இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்வினையாற்றியுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, “ஆந்திர அரசுக்கு அதானி குழுமத்துடன் எந்த விதமான நேரடி ஒப்பந்தமும் இருந்தது இல்லை. கடந்த 2021ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம் எஸ்இசிஐ-க்கும் மின்சார விநியோக நிறுவனமான டிஸ்காமுக்கும் இடையில் தான் இருந்தது. அமெரிக்க ஆணையத்தின் குற்றப்பத்திரிகையை மேற்கோள் காட்டி மாநில அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தவறானது.” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, தற்போது ஆட்சியில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக மவுனம் காத்து வருகிறது. “இது தொடர்பாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு அந்த அறிக்கையினை நாங்கள் முழுமையாக படிக்க வேண்டியுள்ளது. அதற்கு இரண்டு மூன்று நாட்கள் எடுக்கும்” என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கொம்மாரெட்டி பட்டாபிராம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT